இறைவனின் திட்டத்துக்கு சம்மதம்!
By முனைவர் தே. பால் பிரேம்குமார் | Published On : 03rd December 2021 06:00 AM | Last Updated : 02nd December 2021 10:02 PM | அ+அ அ- |

குடும்பம் என்பது இறைவன் ஏற்படுத்திய அமைப்பு. கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், சமூகம், ஊர், நகரம், நாடு என்ற மாபெரும் அமைப்பை தேவன் தந்தார்.
இவ்வமைப்பு ஆண், பெண் இருபாலரையும் பாதுகாக்கிறது. ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆகும்பொழுது, சமூகம் அவர்களுக்குத் தனி மதிப்பைத் தருகிறது. அவர்கள் உறவுக்குள் பாதுகாக்கப்படுகின்றனர்.
கடவுள் தம் ஒரே மைந்தன் இயேசுவை மனிதனாகப் பிறக்கச் செய்து, இவ்வுலகில் அவருக்குத் தாய், தந்தை என்ற பந்தம் அளித்து, குடும்ப அமைப்பை ஏற்படுத்துகிறார்.
கடவுள், தாம் பிறக்கத் தேர்வு செய்து கொண்ட குடும்பம் யோசேப்பு, மரியாள் குடும்பம். இக்குடும்பம் தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்த போதிலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். யோசேப்பு ஒரு தச்சுத் தொழிலாளி. உண்மை, அன்பு, தெய்வ பக்தி மிகுந்தவர்.
மரியாள் அதுபோன்றே பக்தியும் பரிசுத்த வாழ்வும் உடையவராக இருந்தார். தேவனோடு தினமும் பேசி, வழிபடும் அர்ப்பணிப்பு அவரிடம் இயல்பாகவே இருந்தது. இவர் தமது பெற்றோரின் விருப்பப்படி, தனக்கு மணமகனாக நியமிக்கப்பட்ட யோசேப்புவை மணக்க ஒப்புக் கொள்கிறார்.
இந்நிலையில் தேவன், நற்செய்தி அறிவிக்கும் தூதர் கேப்ரியேலை அனுப்பி, தேவ திட்டத்தை மரியாளுக்கு அறிவிக்கிறார். தேவனின் திட்டம் பெரியது. கன்னி மரியாள் கர்ப்பவதியாக வேண்டும்; தேவ குமாரனைத் தன் கர்ப்பத்தில் சுமக்கவேண்டும். திருமணமாகி, குடும்பம் நடத்தி, கர்ப்பவதியாகும் இயல்பு இல்லை. பரிசுத்த ஆவியால் மரியாள் உறவு இல்லாமல் கர்ப்பம் தரிக்க வேண்டும். மரியாள் கன்னியாக இருந்த போதும் இறைவனின் திட்டத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
"இது எப்படி சாத்தியம் ஆகும்? நான் இறைவனின் அடிமை! தேவன் விரும்புவது போல் ஆகக்கடவது!' என்று தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறார். கேப்ரியேல் மகிழ்ந்து "தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை!' என்கிறார் (லூக்கா - 1 : 37).
கர்ப்பவதியான மரியாளை, தன் அன்பு மனைவியாக யோசேப்பு ஏற்றுக்கொண்டு சமூகப் பாதுகாப்பு அளிக்கிறார். இறைவனால் கனவில் சொல்லப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிகின்றார்.
அரசு ஆணைப்படி, குடிமதிப்பு எழுத, தம் ஊராகிய பெத்லகேமுக்கு மரியாளை மிகப் பரிவுடன் அழைத்துச் செல்கின்றார். போகும் வழியில் கணவராக, உறவினராக, பாதுகாவலராக, நண்பராக அன்புடன் யோசேப்பு துணை நிற்கின்றார். வரலாற்றில் வாழ்கின்றார். வாழ்க யோசேப்புவின் குடும்பம்! நமது குடும்ப அமைப்பைப் போற்றுவோம்! இறையருள் நம்மோடு!