மலராக மாறிய அஸ்தி!
By எழுச்சூர் க. கிருஷ்ணகுமார் | Published On : 09th July 2021 12:42 PM | Last Updated : 09th July 2021 12:42 PM | அ+அ அ- |

மலராக மாறிய அஸ்தி!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கடம்பர் கோயில் என்கிற கிராமத்தில் ஸ்ரீஆவுடைநாயகி உடனுறை ஸ்ரீகடம்பநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் தல விருட்சம் கடம்ப மரமாகும். இத்திருக்கோயிலின் தீர்த்தத்தைப் பற்றி காஞ்சி புராணம் அந்தர் வேதிப் படலத்தில் சிறப்புறக் கூறப்பட்டுள்ளது.
இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1095 -இல் எடுப்பிக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற நிலம் தானமளிக்கப்பட்டது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் 09.02.1521 -இல் திருப்பணிகள் செய்து நிலங்களை வழங்கிய தகவலும், மூஞ்சூர்பட்டு அனந்தையன் நித்திய பூஜைக்கு வெங்கச்சேரி கிராமத்தில் 50 குழி நிலங்களை தானம் செய்துள்ள தகவலும் கோயிலில் உள்ள மூன்று கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது.
தலப்பெருமை: பாண்டிய நாட்டில் வாழ்ந்த புத்திசேனன் என்ற அந்தணன் தன் தந்தை குணசீலனுடைய அஸ்தியை, அவருடைய கட்டளைப்படி கங்கையில் கரைக்க எடுத்துச் செல்கையில், இத்தலத்தின் வழியாக வந்தான்.
அப்பொழுது, குடத்திலிருந்து பூமணம் வீசியது. அது கண்டு வியந்து, குடத்தைத் திறந்து பார்க்க, அதிலிருந்த எலும்புகள் மலர்களாக மாறியிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.
இறைவன் அசரீரியாக "இத்தலம் காசியினும் பெருமை உடையது. உம் தந்தையின் அஸ்தி மலர்களாக மாறியதால் இத்தலத் தீர்த்தத்திலேயே கரைத்துவிடு!' எனக்கூறினார்.
அதன்படி அஸ்தியை தீர்த்தத்தில் கரைத்து தந்தையை முக்தி அடையச் செய்தான் என்பது வரலாறு. இன்றும் பலர் இங்கு வந்து பிதுர் சாந்தி செய்வது வழக்கமாக உள்ளது.
கோயிலின் அமைப்பு: கிழக்கு, மேற்கு திசைகளில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. மஹா மண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் இத்திருக்கோயில் உள்ளது.
கிழக்கு நோக்கிய கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாருடன் லிங்கத் திருமேனியாய் கடம்பநாத சுவாமி பக்தர்களின் குறைபோக்கி பேரருள் புரிகிறார்.
அம்பிகை ஆவுடைநாயகி அங்குசம், பாசம், அபய வரதம் தாங்கி அற்புதக் கோலம் கொண்டு பாகம்பிரியாளாக தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறாள்.
வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கில் சந்தான கணபதியும், வடமேற்கில் வள்ளி தெய்வானையுடன் சண்முகப் பெருமானும், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், துவார கணபதி சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பிகை சந்நிதிக்கு அருகில் கால பைரவர் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார். சூரியபகவானும் உட்பிரகாரத்தில் இருந்து அருள்கின்றார்.
விழாக்கள்: பங்குனி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பேருந்து வசதி: காஞ்சிபுரத்திலிருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்துகளும் செல்கின்றன.
நேரம்: காலை 7.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.00 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: கண்ணன் சிவாச்சாரியார் - 9655035503 / தர்மகர்த்தா ராஜசேகரன் - 9443643434.