164. பொருநை போற்றுதும்: சங்கரன்கோயிலில் பஞ்சபூதத்தலங்கள்

அன்னமும் ஆமையும் முக்தி பெற்ற திருவிளையாடல் இங்குதான் நடந்தது. மருதூர்அணையின் பகுதியில் அன்னம் ஒன்றும் ஆமை ஒன்றும் வாழ்ந்து வந்தன. முன்வினைப்பயனால், இறைவன் மீது அன்பு பூண்டு வாழ்ந்தன.
164. பொருநை போற்றுதும்: சங்கரன்கோயிலில் பஞ்சபூதத்தலங்கள்
164. பொருநை போற்றுதும்: சங்கரன்கோயிலில் பஞ்சபூதத்தலங்கள்
  • அன்னமும் ஆமையும் முக்தி பெற்ற திருவிளையாடல் இங்குதான் நடந்தது. மருதூர்அணையின் பகுதியில் அன்னம் ஒன்றும் ஆமை ஒன்றும் வாழ்ந்து வந்தன. முன்வினைப்பயனால், இறைவன் மீது அன்பு பூண்டு வாழ்ந்தன. நெல்லையப்பர் திருக்கோயில் நிர்மால்யங்களை (கடவுளுக்குச் சார்த்திய மாலை, மலர்கள் போன்றவை) பொருநையில் சேர்த்து விடுவார்கள். இந்த மாலைகளும் மலர்களும் மருதூர் அணைப் பகுதியில் வந்து ஒதுங்கும். அன்னமும் ஆமையும் அவற்றைப் பிரசாதமாகக் கொள்ளும். கருவூர்ச்சித்தரின் சாபத்தால், எருக்க மலர்கள் வந்து ஒதுங்க, திகைத்துப் போன அன்னமும் ஆமையும் என்ன என்று தேட முனைந்தன. ஆமையைத் தூக்கிக் கொண்டு அன்னம் பறந்து வர, மானூரில் சித்தருக்கு இறைவனார் காட்சி கொடுத்தபோது, இவையும் அத்திருக்காட்சியைக் கண்டன. முக்தி பெற்றன. அம்பலவாண சுவாமி கோயிலின் கல்சுவரில் அன்னம், ஆமை சிற்பங்களைக் காணலாம். 
     
  • மானூர்அம்பலவாண சுவாமி கோயிலில் உள்ள "திருவடிப் போற்றி' பற்றி, பிரிட்டிஷ் கால நெல்லைப் பதிவுகள் தெரிவிக்கின்றன. பாண்டிய மன்னர் ஒருவர் வடதேசத்திலிருந்து கொணர்ந்த ஏழடி உயர ஸ்தூபிதான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சித்தர் ஒருவரின் ஆன்மா ஸ்தூபிக்குள் இருப்பதாக ஐதீகம். "திருவடிப் போற்றி' என்பது மருவி, "திருவாளிப்போத்தி' என்றழைக்கிறார்கள். 
     
  • சங்கரநயினார்கோயிலும் சுற்று வட்டாரமும் 18, 19-ஆவது நூற்றாண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் வடமேற்கு எல்லையாக விளங்கிய இப்பகுதி, அடர் வனங்களும் மலைக் குன்றுகளும் நிறைந்ததாக இருந்தது.நெற்கட்டும் செவ்வல், ஊற்றுமலை, சிவகிரி, சொக்கம்பட்டி, தலைவன்கோட்டை, சேத்தூர் போன்ற பாளையங்களால் இப்பகுதி சிறந்தது. 
     
  • வைப்பாறு, கருப்பாநதி, உப்போடை ஆகியவற்றின் நீரோட்ட மற்றும் வடிகால் பிரதேசங்களாகவும் இப்பகுதி திகழ்ந்தது. 
     
  • காரிசாத்தான் பகுதியில் காணப்பட்ட அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து, துணைக் கலெக்டராக இருந்த எல். கேமியேட் நிரம்பப் பதிவு செய்திருக்கிறார். அகழ்வுகளில், பல வகையான ரத்தினக் கற்கள் கிட்டியுள்ளன. மிக்க வேலைப்பாடு கொண்ட கற்கள் பதித்த ஆபரணங்களின் துண்டுகளும் கிடைத்துள்ளன. பளபளப்பான செஞ்சிவப்புக் கல் துண்டுகளும் கிடைத்தன. இத்தகைய செஞ்சிவப்புத் துண்டுகளுக்கு, உள்ளூர் மக்கள் "கோழி ஈரல் கல்' என்று பெயர் சூட்டியிருந்தனர். பழுப்பு வண்ணக் கல் துண்டுகளுக்குப் "பாப்பாரப் பாசி' என்று பெயர் வைத்திருந்தனர். பாண்டங்களின் துண்டுகளும் இருந்தன.

    "இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இது மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியாக இருந்து, திடீர் பகைத் தாக்குதலால் மக்கள் அவரவர் வீடுகளிலேயே கொல்லப்பட்டிருக்கக்கூடும்' என்பதாகவே கேமியெட் தெரிவித்துள்ளார். சாயமலை, குருவிகுளம், நாலுவாசல் கோட்டை, பெருங்கோட்டூர், குவளைக்கண்ணி, மரத்தோணி, கரிவலம் வந்த நல்லூர், பனையூர், கூடலூர், வாசுதேவநல்லூர், கூடாரப்பேரி, தென்மலை, தேவிப்பட்டணம், வீரசிகாமணி ஆகிய இடங்களில் பண்டைய குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும் என்றும் பதிகிறார். 
     
  • 1803-04 -ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட நில உரிமை நடவடிக்கைகளிலும், இவற்றின் பத்திரங்களிலும், நெற்கட்டும்செவ்வல் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பெயர்கள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு அதிருப்தி! "நெற்கட்டும்செவ்வல்' என்பது மறக்கடிக்கப் படவேண்டும் என்பதற்காக "ஆவுடையாபுரம்' என்றே பதிவித்ததாக பேட் குறிப்பிடுகிறார். 
     
  • புளியங்குடிப்பகுதியின் வறண்ட நிலத்தில் வளர்ந்த கொழுஞ்சி, நிறைய அளவில் பொருநைக் கரை கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு, நெல் வயல்களில் தழையுரமாகப் பயன்படுத்தப்பட்டதை நெல்லை மாவட்ட ஆவணப்பதிவுகள் தெரிவிக்கின்றன. 
     
  • பஞ்சபூதத்தலங்கள் என்று சிவன் கோயில்கள் சிலவற்றைக் குறிப்பது வழக்கம். இத்தலங்களில், அந்தந்தத் தலங்களுக்கு ஏற்ப, ஐம்பூதங்களில் ஒன்றாகச் சிவனாரை வழிபடுவார்கள். தென்தமிழ்நாட்டின் பஞ்சபூதத்தலங்கள்ஐந்தும், சங்கரன் கோயில் பகுதியிலேயே அமைந்துள்ளன. சங்கரன்கோயில் பிருத்வித் (நிலம்) தலமாக, தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகியவை முறையே நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றுக்கான தலங்கள் ஆகும். 
     
  • சங்கரன் கோயிலில், அம்மன் கோயில் முகப்பு கோபுரத்தில் கடிகாரம் ஒன்று இருந்ததாம். நாழிகைக் கணக்குப்படி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை இது மணி அடித்ததாம். 1900களிலேயே இது பழுதுபட்டுவிட்டதாகத் தெரிகிறது. 
     
  • 1767-இல், நெல்லைப்பகுதிகள் முழுவதிலும் சுற்றுப் பயணம் செய்த கர்னல் கேம்பெல், வாசுதேவநல்லூர் கோட்டையைத்தான், பிற கோட்டைகளைக் காட்டிலும் வலுவானது என்று எழுதுகிறார். 
     
  • சீவலப்பேரிக்கு அருகுள்ள "மறுகால்தலை' என்னும் இடத்தில் காணப்படுகிற கல் படுக்கைகளைப் போல (பஞ்ச பாண்டவர் படுக்கை), சங்கரன்கோயிலுக்கு தென்மேற்கே உள்ள "வீரசிகாமணி' என்னும் இடத்திலும் சில கல் படுக்கைகள் காணப்படுகின்றன. வீரசிகாமணி கோயிலில் காணப்படும் கல் உருவங்களைப் பஞ்ச பாண்டவர் என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர். "மறுகால்தலை' கல் அமைப்புகளுக்கு பெüத்த சமயத்தோடு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. "வீரசிகாமணி' படுக்கைகள் சமணப்படுக்கைகள் என்று கருதப்படுகின்றன. குகைக்கோயில்களும் உள்ளன. வீரசிகாமணியில் அகழாய்வுக்கான பகுதிகளும் உள்ளன.    
     
  • (தொடரும்)
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com