இயேசுவின் சீடர்கள்

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியை நிறுவும் அறப்பணியில் அவரோடு இணைந்து துணை நின்றவர்கள் அவரது சீடர்களே! 
இயேசுவின் சீடர்கள்


இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியை நிறுவும் அறப்பணியில் அவரோடு இணைந்து துணை நின்றவர்கள் அவரது சீடர்களே! 
ஆனாலும் அத்தகைய சீடர்களில் ஒருவனே அவரைச் சிலுவைச் சாவுக்கு காவு கொடுக்க, காட்டியும் கொடுத்தான். எனவே "சீடத்துவம்' என்பதற்கும் தகைசால் தகுதி ஒன்று இருக்கவேண்டும்.
செபதேயுவின் இரு மகன்களான யோவானும், யாக்கோபுவும் இயேசுவின் சீடர்கள் ஆவர். ஒருமுறை அவர்கள் இருவரும் தங்கள் தாயாருடன் வந்து இயேசுவை சந்தித்து ஒரு வேண்டுதல் வைத்தனர். 
நீர் அரசுரிமையுடன் அரியணையில் இருக்கும்போது, தன் இரு மகன்களில் ஒருவர் அவரது வலப்புறமும், இன்னொருவர் இடப்புறமும் அமர அருள்புரிய வேண்டுமென தங்கள் தாய் வழியாகக் கோரினர்.
இயேசுவோ அவர்களிடம் ""நான் பருகும் துன்பக் கிண்ணத்தில் நீங்கள் அருந்த இயலுமா? நான் பெறும் திருமுழுக்கினை நீங்கள் பெற இயலுமா?'' என்று கேட்டார். இருவருமே ""இயலும்!'' என்றனர். 
ஆம்! இயேசு தமது சீடர்களை தானே தேடித் தேடி தெரிவு செய்தார். ஆரம்பத்தில் அவரது சீடர்களேகூட அவர் யூதரின அரசர் ஆகப்போகிறார் என்னும் ஆதங்கத்தில் அவரோடு பயணித்தார்கள். முதலில் அவர் தேர்ந்த பன்னிரு சீடர்கள் அவரோடு இணைந்து பயணித்தார்கள் என்றாலும் அவர்கள் அல்லாமலும் எழுபத்திரண்டு சீடர்கள் இயேசுவால் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களைத் தமது இறையாட்சியின் தூதுவர்களாக, எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வைத்தார். 
""ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல உங்களை அனுப்புகிறேன். பணப்பையோ, கைப்பையோ, மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்!'' என்றார் (லூக்.10). 
ஒரு நாட்டின் நலனுக்காய் உழைக்கிற எந்த மனிதனுக்கும், அவர்தம் மக்களே அன்னம் அளிப்பவராயும், ஆபத்தில் காப்பவராயும் இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் உள்ளுரை அருள்மொழி.
அதைத் தொடர்ந்து, ""வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும் அங்கேயே தங்கியிருங்கள். அங்கிருந்தே புறப்படுங்கள்!'' என்றார்.
அப்பழுக்கில்லாத உண்மையான இறையரசின் தூதுவர்கள் எவரும் வணக்கத்திற்கு உரியவரேயன்றி, அவர்கள் யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை என்பதே தேவன் உரைத்த உண்மை.
எந்த வீட்டுக்கு போனாலும் முதலில் ""இவ்வீட்டுக்கு சமாதானம்!'' என வாழ்த்துங்கள் என்றார். அந்த எழுபத்திரண்டு சீடர்களும் தேவன் உரைத்த வழி, தேசமெங்கும் பயணம் போனார்கள். அசுத்த ஆவிகள் தங்கள் ஆணைக்கு அடிபணிந்ததாய் ஆண்டவர் இயேசுவிடம் மீண்டும் வந்து ஆனந்தமாய் அறிவித்தார்கள் (லூக்.10:17). ஆனாலும், அவர்களில் பலர் பாதை மாறினர். இறுதியில் பன்னிரு சீடர்கள் மட்டுமே அவரோடு பயணம் தொடர்ந்தனர் (யோவா. 7:66).
தாழ்ச்சியில் மகிழ்ச்சியும், நல்ல தலைவனைப்போல வாழ்வதுமே ஒழுக்கமுள்ள சீடத்துவத்தின் அடையாளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com