ராம பக்தி சாம்ராஜ்யம்!

அவதாரப் புருஷரும், நாரத மகரிஷியின் அம்சமாகக் கருதப்படுபவருமான, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 175-ஆவது ஆராதனை வைபவம், இந்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22 -ஆம் தேதி வரை பிருந்தாவனத்தில் நடைபெறுகிறது.  
ராம பக்தி சாம்ராஜ்யம்!
Updated on
3 min read


அவதாரப் புருஷரும், நாரத மகரிஷியின் அம்சமாகக் கருதப்படுபவருமான, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 175-ஆவது ஆராதனை வைபவம், இந்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22 -ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் திருவையாறிலுள்ள அவரது பிருந்தாவனத்தில் நடைபெறுகிறது.  

தலைக்கோட்டை யுத்தத்தில் விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்ற பின்னர், ஆந்திரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து, குடியேறிய பல குடும்பங்களில் ஒன்றுதான் கிரிராஜ கவி என்ற அந்தணரின் குடும்பம். அவரது பெண் பெற்ற தவப்புதல்வர்தான் தியாகராஜ சுவாமிகள். 

தியாகராஜரின் தந்தை பெயர் ஸ்ரீ ராம பிரம்மம். தஞ்சை மன்னர் சரபோஜி அளித்த சிறு வீட்டில் குடியேறினார், ராம பிரம்மம். தியாகராஜ சுவாமிகள் இயற்றிய "தொரகுனா இடுவண்டி சேவா!' என்ற பிலஹரி ராக கீர்த்தனையில் இதனைப் பாடியிருக்கிறார்.

தியாகராஜர் அவதரித்தது, சர்வஜித் வருடம், சித்திரை மாதம், சுக்கில சப்தமி, 27-ஆம் நாளுக்கு, சரியான ஆங்கிலத் தேதி மே 4, 1767-ஆம் ஆண்டாகும்.  (சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் 1759-இல் பிறந்ததாகவும் கூறுகின்றனர்).

நினைவு தெரிந்த நாளிலிருந்தே, ஸ்ரீராமபிரானின் மீது அளவற்ற பக்தி கொண்ட தியாகராஜர் வளர, வளர, அவரது ஸ்ரீராம பக்தியும் வளர்ந்துகொண்டே வந்தது!

ஆதலால், தினமும் காலையில் புண்ணிய நதியான காவிரியில் நீராடி, பின்பு திருவையாறு திருவீதிகளில் ஸ்ரீராமபிரானின் மீது கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டே சென்று, “உஞ்சவிருத்தி எடுத்து, அதன் மூலம் வரும் அரிசியைக் கொண்டு, வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.

அவரது தர்ம பத்தினி பார்வதியும் நிழல் போன்று அவருக்கு ஆதரவாக, துணை நின்றார். தனக்கென்று சிறு அளவு ஆசைகூட இல்லாமல், கணவருக்குப் பணி செய்வதே, தனது பிறவியின் நோக்கமாகக் கொண்டிருந்தார். 

சோதனை மேல் சோதனை:

இதற்கிடையில், தியாகராஜரின் அன்பு மனைவி பார்வதி, இறைவனடி சேர்ந்துவிட்டார். காலக்கிரமத்தில், பார்வதியின் இளைய சகோதரியான கனகாம்பாள் எனும் உத்தமியை மறுமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தனது ராம பக்திக்கு ஏற்ப, அக்குழந்தைக்கு "சீதாலட்சுமி' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

காலஞ்செல்லச் செல்ல, குடும்பத்தில் வறுமை வாட்டத் தொடங்கியது. வறுமை அதிகமாக, அதிகமாக தியாகராஜரின் ராம பக்தியும், வைராக்கியமும் அதற்குச் சமமாக அதிகரித்துக்கொண்டே வந்தது. எங்கும் ராமன்; எதிலும் ராமன்! எப்பொழுதும் ராமன்!

தியாகராஜர் எதுபற்றியும் கவலைப்படவில்லை! உண்ணும் உணவும், பருகும் நீரும், ஸ்ரீராமனே! அவன் குடும்பத்தைப் பற்றி அவனல்லவா கவலைப்படவேண்டும்....? என்று ராம பக்தியிலேயே அனைத்துத் துன்பங்களையும் மறந்திருந்தார், அவர்!

மன்னர் சரபோஜி அனுப்பிய வெகுமதியை மறுத்த வைராக்கியம்:

தினமும் உஞ்சவிருத்திக்குச் செல்லுமுன், தனது இஷ்ட தெய்வமாகிய ராமபிரான், சீதா பிராட்டி விக்கிரகத்திற்கு (ஸ்ரீராம பஞ்சாயதன்) ஆராதனை செய்துவிட்டு, அதன் பின்னர்தான், தனது "தம்புரா'வை எடுத்துக்கொண்டு உஞ்சவிருத்திக்குச் செல்வது வழக்கம்!

தியாகராஜரின் ராம பக்தியையும், வைராக்கியத்தையும், ஏழ்மையையும் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னர், தனது மந்திரி ஒருவரைக் கொண்டு, வெள்ளித் தட்டில் பொற்காசுகளை வைத்து, வெகுமதியாக அனுப்பினார். 

ஆனால், தியாகராஜரோ, அவற்றைக் கண்ணெடுத்தும் பாராமல், "நிதி சால சுகமா...?' எனும் கல்யாணி ராகக் கீர்த்தனையைப் பாடி, அவற்றை நிராகரித்து, "ராமபிரானைப் பூஜிக்கும் சுகத்தை, மன்னன் அனுப்பிய நிதி கொடுக்குமா?' எனக் கேட்டு, அதனைத் திருப்பியனுப்பி விட்டார்.

சப்யேசனின் சீற்றம்: வலிய வந்த அதிர்ஷ்டத்தைத் திருப்பியனுப்பி விட்டதை அறிந்த அவரது அண்ணனாகிய சப்யேசனுக்கு சீற்றம் தாங்கவில்லை.

குடும்பத்தை வாட்டியெடுத்த வறுமையை அறிந்தும்கூட, வலிய வந்த செல்வத்தை உதறித் தள்ளிய தன் தம்பி மீது கோபம், கோபமாக வந்தது. இது அறியாமையா? அல்லது அகந்தையா? கோபம் எரிமலையாய் வெடித்தது சப்யேசனுக்கு!

இவையனைத்திற்கும் காரணம், அந்த ஸ்ரீராமன்தான்! அவரது கோபமனைத்தும், அவரது தம்பி ஆராதித்து வந்த விக்கிரகத்தின் மீது திரும்பியது! இரவில் தியாகராஜர் உறங்கியபோது, அவர் ஆராதித்துவந்த ஸ்ரீசீதா ராம விக்கிரகத்தை எடுத்துச் சென்று காவிரி நதியில் எறிந்துவிட்டார் சப்யேசன்!

வழக்கம்போல், அதிகாலையில், ஸ்ரீராமனைத் துயிலெழுப்ப வந்த தியாகராஜருக்கு, அங்கு விக்கிரகத்தைக் காணாமல், அனலிடையிட்ட புழுவைப்போல் துடித்தார்.

பித்துப் பிடித்தவர்போல, "ராமா...! ராமா...!' என்று அலறித் துடித்துக் கண்ணீர் விட்டுக் கதறினார், தியாகராஜர். "எங்கே என் ராமன்?; எங்கே என் ராமன்?' என்று வீதியெங்கும் வெறிபிடித்தவர்போன்று கூவிக்கொண்டு ஓடினார்.

அன்று இரவே, ராமபிரான் அவரது கனவில் தோன்றி, தான் காவிரியில் எழுந்தருளியிருப்பதை சூட்சுமமாகத் தெரிவித்தான்!

திடுக்கிட்டு எழுந்த அந்த பரம பக்தர், ஸ்ரீராமனின் கருணையை எண்ணி, எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

"என் பிரபோ! எப்போதும் பாற்கடலில் பள்ளிகொண்ட நினைவில், காவிரியை விரும்பிச் சென்றாயோ?' என்ற பொருள்கொண்ட "க்ஷீர ஸôகர ஸயனா...!'என்ற தேவகாந்தாரி ராகப் பாடலினால் தன் ஆனந்தம் அனைத்தையும் வெளிப்படுத்தினார். ஓடோடிச் சென்றார், பொன்னி நதிக்கரையை நோக்கி.

அங்கு ஸ்ரீராம பிரான், சீதா பிராட்டியுடன் தன் இருப்பிடத்தைக் காட்டியருளினான். மேனி முழுவதும் சிலிர்க்க, பெற்ற தாய், காணாமற் போன தன் செல்லக் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அள்ளி, வாரி அணைத்துக் கொள்வதுபோல், அந்த விக்கிரகத்தை ஆரத்தழுவி, முத்தமிட்டு, தன் தலை மீது வைத்துக்கொண்டு, வீட்டின் பூஜையறையில் மீண்டும் எழுந்தருளச் செய்து, பூஜித்து வரலானார்.

தியாகராஜ சுவாமிகள் வழிபட்டு வந்த சீதா ராம விக்கிரகம் ஏதோ உலோகத்தினாலான சிலையல்ல! அது, அவரது உயிரோட்டமுள்ள நாடியாகும்!

எவ்விதம் பிறவியில் எத்தகைய கொடிய துன்பங்கள் நேரிடினும், தர்ம நெறியிலிருந்து, சிறிதளவும் பிறழக் கூடாது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட பகவானே ஸ்ரீராமபிரானாக அவதரித்தானோ, அதே போன்றுதான் தியாகராஜ சுவாமிகளும் தனது வாழ்க்கையில் சந்தித்த மிகக் கொடிய துன்பங்களின்போதுகூட, தான்கொண்ட ராம பக்தியிலிருந்தும், தர்ம நெறியிலிருந்தும் எள்ளளவும் தவறவில்லை!

இத்தகைய மகான்களினால்தான், இன்றும் பாரதப் புண்ணிய பூமி, உலகிற்கு எடுத்துக்காட்டிய, நேர்மை, ஒழுக்கம், தர்மம், ஜீவ காருண்யம் ஆகிய உயர் குணங்களை உலகம் பாராட்டுகிறது! 

பாரத தேசத்தில் பிறக்கும் பேறு பெற்ற அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, திருவையாறு சென்று, தியாகராஜரை தரிசிக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு, தியாகராஜ கீர்த்தனைகளை அர்த்தத்துடன் சொல்லிக்
கொடுக்க வேண்டும். 

சிறுவயதில்தான், பக்தி என்னும் விதைகளை நம் குழந்தைகளின் மனத்தில் விதைப்பதற்கு ஏற்ற, வளமான காலமாகும். இதைச் செய்தால், எதிர்காலத்தில் குழந்தைகளைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமலிருக்கலாம். வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய கனிகளைப் பிழிந்தெடுத்து, நமக்குத் தரும் அமுதமே "தியாகராஜ ராமாயணம்' எனப் புகழப்படும் அவரது கீர்த்தனைகளாகும்!

சீதாலட்சுமியின் திருமணம்!


தியாகராஜ சுவாமிகளின் ஒரே மகள் சீதாலட்சுமி திருமண வயதை அடைந்தாள்! பெண்ணின் திருமணத்திற்குக் காசு ஏது அவரிடம்...? தன் பக்தனின் மகள் தன் மகள் அல்லவா? அப்படித்தான் திருவுள்ளம் கொண்டான், தாசரதியும் (ஸ்ரீராமன்)!

திருவையாறில் அப்போது பிரபலமாக இருந்த செல்வந்தர் பஞ்சநத முதலியாரின் கனவில் தோன்றிய ராமபிரான், "எமது பரம பக்தனான தியாகராஜனின் பெண்ணிற்கு விவாகத்தை நடத்திக் கொடுக்கவும்...!' என ஆணையிட்டான்.

திருமண நாளும் வந்தது! தியாகராஜ சுவாமிகள் ஒரு சிலருடன்தான் பழகுவார். அத்தகைய பேறுபெற்ற மிகச் சிலரில் வாலாஜாப்பேட்டை வெங்கட்ரமண பாகவதரும் ஒருவர் (பிற்காலத்தில், சுவாமிகளின் சீடரானார்).

முதல் நாளே ஓர் அவசர காரியமாக தஞ்சை செல்லவேண்டியிருந்தது பாகவதருக்கு! திருமணத்திற்கு வர இயலவில்லை.

அதனால், பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை வாங்கி, அதை ஒரு பட்டுத் துணியில் பாதுகாப்பாகச் சுற்றி, கிராமத்து விவசாயி ஒருவரிடம் கொடுத்து, உடனடியாக, அக்காலத்து கட்டை வண்டியில் திருவையாறு சென்று மணப்பெண்ணிடம் அன்பளிப்பாகக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தார். அந்தப் படம், சீதாராம, லக்ஷ்மண, ஹனுமத் சமேதரின் அழகிய திருக்கோலத்துடன் திகழும் அற்புதப் படமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com