கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மணிகண்டனுக்கு மகத்தான கோயில்!

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் புகழ் நாளுக்கு நாள் பெருகி ஆஸ்திக  மார்க்கத்தின்

News image
Updated On :11 நவம்பர் 2022, 12:45 pm

எஸ். வெட்கட்ராமன்


கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் புகழ் நாளுக்கு நாள் பெருகி ஆஸ்திக  மார்க்கத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருப்பது கண்கூடு. ஆண்டுதோறும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

ஐயப்பனுக்கு பல ஊர்களிலும் கோயில்கள் உருவாகி வருகின்றன. இருப்பினும்,  சரியான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் கோயில்கள்  குறைவு. இதை கருத்தில் கொண்டு,   சென்னை அருகே பல்லாவரத்தை அடுத்த பம்மல் சங்கரா நகர் என்ற சங்கர் நகரில் கேரள முறைப்படி  ஐயப்பன் கோயிலை அமைத்துள்ளார் கிருஷ்ணன் என்னும் அன்பர்.

1970-ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சி மகா சுவாமிகளின் ஆசிகளுடன் வளர்ச்சி கண்ட இந்த நகரில் உள்ள 31-ஆவது தெருவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் மிகுந்த சிரமத்துடன் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே ஒரு கற்கோயிலாக கட்டப்பட்டது. 

2008-ஆம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
அச்சமயம் பிரதான மூர்த்தியாக ஸ்ரீ ஐயப்பன், கணபதி, சிவன், அஷ்டபுஜ துர்கா தேவி,   நாகராஜன் சந்நிதிகளும் பிரதிஷ்டையாயின. பின்பு கோயில் வளர்ச்சியில் குருவாயூரப்பன், பாலமுருகன், ஆஞ்சநேயர் சந்நிதிகள் அமைக்கப்பட்டு, 42 அடி உயரத்தில் கொடிமரம் பிரதிஷ்டையுடன் 2020-இல், இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சந்நிதிகளின் சிறப்பு:  சபரிமலையில் இருப்பது போன்றே சூரிய பிரபையுடன், சின்முத்திரையைக் கொண்டு தவக்கோலத்தில் காட்சி தரும் ஐயனின் திருவுருவம் அற்புத அழகு. நாகர்கோவிலில் வார்க்கப்பட்டு, கன்னியாகுமரி அம்மன், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு,  பம்மல் சூரி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை ஆன சிறப்பு பெற்றது.

ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் உள்ள மூல விக்கிரகம் கேரளத்திள்ள குருவாயூர் கோயிலில் உள்ளது போன்றே அமைந்துள்ளது, அரசு, வேம்பு, வில்வம் என 3 மரங்களும் பிணைந்திருக்க அதன் கீழ் நாகப் பிரதிஷ்டையும் கோயிலின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. 

வழிபாட்டு முறைகள்: பிரதிஷ்டை வைபவங்கள்,  நித்திய பூஜை, வழிபாடுகள் அனைத்தும் தாந்த்ரீக முறைப்படி கேரள நம்பூதிரிகளால் செய்யப்படுவது விசேஷம்.  காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி இரவு அத்தாழ பூஜையுடன் நிறைவுறுகிறது. 

ஆண்டுதோறும் ஒரு தடவை பிரதிஷ்டாதின உத்ஸவத்தின்போது,  ஐயப்பன் உட்பிரகாரம் வலம் வருகிறார். பங்குனி உத்திரம், விஷூ புண்ணிய காலம், திருவோணம் போன்ற முக்கிய விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றன. மகர காலத்தில் அருகில் உள்ள பவானி அம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப்பெட்டி கொண்டுவரப்பட்டு,  கோயிலுக்குப் பின்புறம் உள்ள மலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டு, ஸ்ரீ ஐயப்பனுக்கு மகா தீபாராதனையும் காட்டப்படுகிறது.

ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் தினசரி பால் பாயசம் நிவேதனம் செய்யப்பட்டு,  பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.  வியாழக்கிழமைதோறும் நாராயணீயம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணங்கள் செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு அன்ன பிரசன்னம்  (சோறு ஊட்டும் சடங்கு) செய்விக்கப்படுகிறது. 

ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, குசேலர் தினம் போன்ற விசேஷ தினங்கள் குருவாயூரைப் போலவே மேற்கொள்ளப்படுகின்றன . நாகபஞ்சமி, கருடபஞ்சமி தினங்களில் நாகராஜா சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன . சபரிமலை பக்தர்களுக்காக மாலை அணிவித்தல், இருமுடி கட்டுதல் போன்ற வைபவங்களும் நடத்தப்படுகின்றன.

கோடி அர்ச்சனை:  2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஸ்ரீ ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை  செய்யும் வைபவம் நவ. 19-இல் தொடங்கி டிச. 5 வரை நடைபெற உள்ளது.  

14-ஆம் ஆண்டு உத்ஸவ பூஜைகள் நவ. 14-ஆம் தேதி சகஸ்ர கலசாபிஷேகத்துடன் துவங்கப்பட்டு நவ. 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு:  9444444238.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.