எட்டு வகை செல்வங்களை அருளும் வரலட்சுமி நோன்பு!

எட்டு வகை  செல்வங்களுக்கும் அதிபதியான  வரலட்சுமியை  மனதில் நிறுத்தி பூஜித்து விரதமிருந்து வழிபடுவது  வரலட்சுமி விரதமாகும். 
எட்டு வகை செல்வங்களை அருளும் வரலட்சுமி நோன்பு!

எட்டு வகை  செல்வங்களுக்கும் அதிபதியான  வரலட்சுமியை  மனதில் நிறுத்தி பூஜித்து விரதமிருந்து வழிபடுவது  வரலட்சுமி விரதமாகும். 

வரங்களை  அள்ளித் தருபவள்  வரலட்சுமி.   அதை ஆடி அமாவாசை கழிந்த 2-ஆவது வெள்ளிக்கிழமை கொண்டாடுகின்றனர். செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. அவள்  பாற்கடலில்  அவதரித்தவள்.

திருப்பாற்கடலை  தேவர்களும்,  அசுரர்களும் அமிர்தத்துக்காக  கடைந்தபோது, வெளிவந்த  பல பொருள்களோடு சேர்ந்து மாலை நேரத்தில் மகாலட்சுமி தோன்றிய தினத்தைதான்  "வரலட்சுமி  விரதம்'  என்று கொண்டாடுகின்றனர்.

திருமகள் எல்லா அரங்கத்துக்கும்  தலைவி. திருமால்தான் எங்கும் நிறைந்துள்ளதை  விளக்க, அனைத்து உலக அழகு, செல்வத்தை ஒன்றாக்கி உருவாக்கியதே, மகாலட்சுமியாகும். தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒரு பகுதியாக,  சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டிய மிகச்  சிறப்பான விரதமாகும். 

இல்லங்களில் விரதத்துக்கு  முந்தைய  நாள்களில் தூய்மை செய்து, மங்கலப் பொருள்களால் அலங்கரிப்பர். வீட்டின் பூஜை அறைக்குள் மனைப் பலகையில், மாக்கோலமிட்டு அலங்கரிப்பர்.   அங்கு  படமாகவோ  அல்லது  சந்தனத்தில் செய்த  லட்சுமியின்  வடிவமோ, சிலைகளோ  வைப்பர்.

சிலைக்கு  மஞ்சளாடை  அணிவித்து, தோடு, மூக்குத்தி, வளையல், தங்கச்சங்கிலிகளை அணிவித்து தாழம்பூவால் பின்னலிட்டு பூச்சூட்டுவர். முன்புறம் வாழையிலையில்   பச்சரிசி  பரப்பி,   புனித நீர்  நிரம்பிய சந்தனம் தடவப்பட்ட தாமிரம் அல்லது வெள்ளிச் சொம்பை வைப்பர்.

நகைக்கடைகளில்  கிடைக்கும்  வரலட்சுமி  அம்மனின்   முகத்தை  வாங்கி இணைத்தோ அல்லது கண், புருவம்,  பொட்டு ஆகியவற்றை  வண்ணத்தில் வரைந்தோ பயன்படுத்துவர்.

மஞ்சள் படுத்திய தேங்காயை குங்குமப் பொட்டிட்டு கலசத்தினுள் 5 மாவிலைகளை வெளியே தெரியுமாறு சொருகி தேங்காயை வைப்பர்.

நிவேதனமாக வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கிழங்கு ஆகியவற்றோடு சாதம்,  பாயசம், வடை,  கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை செய்து வைத்து  வழிபடுவர்.  

ஐந்து முக விளக்கேற்றி,  மகாலட்சுமி தோத்திரங்கள்,  திருமகள் போற்றிகளை மனம்  உருகி  பாடி வேண்டுவர். வீட்டிலிருக்கும் பெரியோரை வணங்கி ஆசி பெறுவர்.

பலன்கள்: "பெண்கள்  வரலட்சுமி  விரதம்  இருந்தால்,  அஷ்டலட்சுமிகளும் மகிழ்வதாக  ஐதீகம். செல்வம்,  தான்யம்,  தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம்,  கல்வி  போன்ற  செல்வங்கள்  அனைத்தும்  கிடைக்கும்' என்பது ஐதீகம்.  

விரதம் இருந்து லட்சுமிதேவியை  பூஜிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். அன்பு, புகழ்,  அமைதி,  ஆரோக்கியம்  கிடைக்கும்.  மாங்கல்யப் பலன் அதிகரிக்கும். கர்ம வினைகள்  நீங்கும். திருமணத் தடை அகலும்.   குழந்தைப் பேறு உண்டாகும். பணி தேடுவோருக்கு நல்ல பணி அமையும்.

தொழிற்சாலைகள்  நல்ல  சிறப்பான  லாபம்  ஈட்டும்.  வியாபாரம் அதிகரிக்கும்.  நோய்கள் அகலும்.  வீடு  கட்ட அல்லது சீர்திருத்த யோகம் அமையும். புதிய பதவிகள்  கிட்டும். வம்பு  வழக்குகள்  அகலும். குடும்பத்தார்களுக்கு   மகிழ்ச்சி  உண்டாகும்.  வீட்டில்  செல்வம்  குறைவின்றி பெருகும்.  மனப் பாரத்தைக் குறைக்கும்  மருந்தாக  இருக்கும். 

கோயில்களில்...: சென்னை  பெசன்ட் நகர் அருள்மிகு மகாலட்சுமி கோயில் என்றழைக்கப்படும் அஷ்டலட்சுமி கோயில் சிறப்புமிக்கது. திருமால் திருமகளுடன்  பிரதான சந்நிதியில் அருள, ஆதிலட்சுமி,  தானிய லட்சுமி, தைரியலட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி ஆகிய 8 ரூபங்களில் அவரவர்களுக்குரிய வாகனங்கள் கொடியுடன் உரிய பீடத்தில் தனித்தனி சந்நிதிகளில் அஷ்டாங்க விமானத்தில் எழுந்தருளியுள்ள  தலமாகும்.

இத்தலத்தில்  வரலட்சுமி விரத பூஜை  ஆக.25-இல் (வெள்ளிக்கிழமை) சிறப்பான முறையில்  நடைபெற உள்ளது. அன்று சிறப்புத் திருமஞ்சனம் செய்து,  உலக நலன் முன்னிட்டு ஸ்ரீ குபேர ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம் ஆகியன செய்து சிறப்பு அலங்காரத்துடன் திருமாங்கல்ய சரடு, நோன்பு சரடு சாற்றி  சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். அன்றைய நாளில் குங்குமம், சந்தனம்,  வெற்றிலை பாக்கு,  சரடு  முதலியவற்றை  பூஜையில்  வைத்து  பூஜித்து,  மாலை  4 மணி முதல் கோயிலுக்கு  வரும்  பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தகவல்களுக்கு:  044  - 2446 6777, 9884653001
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com