நினைத்தாலே அருளும் பெருமாள்!
By எஸ்.வெங்கட்ராமன் | Published On : 27th January 2023 05:56 PM | Last Updated : 27th January 2023 06:21 PM | அ+அ அ- |

திருமால் அர்ச்சாவதார ரூபியாய் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்தைக் கொண்டு அருள் புரியும் திருத்தலங்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது.
திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தால் அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள ஓசூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் உள்ளது.
இந்தக் கிராமம் முன்பு பிரம்மபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. க்ருத யுகத்தில் படைப்புக் கடவுளான நான்முகன் இத்திருத்தலத்துக்கு வந்து பெரிய வேள்விகள் நடத்தியதால் "பிரம்மபுரம்' என பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டுவரும் தல வரலாற்று தகவல்.
இந்தப் பகுதியைஆண்டுவந்த சம்புவராய மன்னர் ஒருவர் இத்தலத்துக்கு வந்து பெருமாளின் அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத் தானம் அளித்து நித்திய பூஜைகள் குறைவற நடத்திட உதவியதாகத் தெரிய வருகிறது.
இவ்வூர் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு காலிங்கராயன் என்பவர், ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டுக்காகத் தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது.
விஜயநகர காலத்து கோயில் கட்டடஅமைப்பு, சந்நிதி தெரு, வீதிகளின் தோற்றம், நடைபெற்றுவந்த பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை பறைசாற்றுகின்றன.
படிக்க: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
இத்தலத்து பெருமாளின் திருமேனி அழகை பார்த்து ரசித்து கண்களால் பருக வேண்டும். அபயவரதஹஸ்தத்துடன் சங்கு சக்கராதாரியாய் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின் திருமேனி அவ்வளவு செüந்தர்யம் வாய்ந்தது நினைவில் வைத்தால் கனவில் காட்சி தரும் ஸ்ரீநிவாஸப் பெருமாள் என்ற பெருமையுடன் பேசப்படும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. மூலவருக்கு இணையாக உத்ஸவ விக்கிரகங்களும் அழகுற அமைந்துள்ளன.
அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது. உத்ஸவ மூர்த்திகளாக தாயார், விஷ்வக்úஸனர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், சுவாமி வேதாந்த தேசிகர், அகோபில மடம்பட்டத்து முதல் அழகிய சிங்கர் ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர் ஆகியோர்கள் சந்நிதி கொண்டு அருளுவது சிறப்பு.
படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?
திருவரங்கத்தில் நடைபெற்று வருவதுபோல் மட்டையடி உத்ஸவம் ஒருகாலத்தில் இங்கு நடைபெற்றுள்ளது. கடைசியாக 1947-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் நடந்துள்ளது.
1994-ஆம் ஆண்டு அகோபில மடத்து 45-ஆவது பட்டத்து ஜீயர் இங்கு விஜயம் செய்து ஸ்ரீமாலோல நரசிம்மருக்கு ஊஞ்சல் உத்ஸவத்தை நடத்தியுள்ளார்.
சிதிலமடைந்து முற்றிலும் வழிபாடு குன்றிய நிலையில், ஓசூர் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் டிரஸ்ட் அமைப்பின் மூலம் கிராம மக்கள், வெளியூர் மக்கள், உபயதாரர்கள் என்ற பெரும் பங்களிப்புடன் 10 ஆண்டுகளாக கற்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.
பலி பீடம், விளக்குத் தூண், கொடிமரம், முன் மண்டபம், பெரிய திருவடி சந்நிதி, அர்த்த மண்டபம், கருவறையுடன் ஒரு பெருமாள் கோயிலுக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் கோயில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு வைபவம் பிப். 1-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 15 யாக குண்டங்கள்அமைக்கப்பட்டு, யாக சால பூஜை, ஹோமங்கள், வைகானஸ ஆகம முறைப்படி நடைபெறவுள்ளன.
மேல்மருவத்தூர் - வந்தவாசி சாலையில் உள்ள மருதாடு வழியாக ஓசூர் செல்ல வேண்டும்.
தொடர்புக்கு: 9884447570, 7418521400.