பாவங்கள் போக்கும் ரத சப்தமி வழிபாடு!

சூரியனை சவிதா, பகன், பூஷா, கேசி, வைசுவநாதர், விருஷாகபி என்று பல்வேறு நாமங்களால் வேதங்கள் போற்றுகின்றன.
பாவங்கள் போக்கும் ரத சப்தமி வழிபாடு!

சூரியனை சவிதா, பகன், பூஷா, கேசி, வைசுவநாதர், விருஷாகபி என்று பல்வேறு நாமங்களால் வேதங்கள் போற்றுகின்றன. இவருக்குரிய திருநாளாக, தை  அமாவாசைக்குப் பிறகு வரும் 7-ஆவது நாள்  ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. முக்கியமான விரத நாளாகும். 

காஷ்யபர் என்ற மகரிஷிக்கு வினதை,  கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழிபட,  சிவன் ஒவ்வொருவரிடமும் ஒரு  முட்டையைக் கொடுத்து ஓராண்டு காலம் பாதுகாக்கச் சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தார்.  அதைக் கண்ட கர்த்துரு தன் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்டு அதை உடைக்க, அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தது. அவள் மிகவும் வருந்தி சிவனை வேண்ட, சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாக அருள்புரிந்தார். 

ஊனமாயிருந்த அந்தக் குழந்தை பெரியவனானதும், சிவனை நோக்கி தவம் செய்ய, அதைக் கண்ட சூரியன் அவனைக் கேலி செய்தான். எதையும் கவலைப்படாமல் தவம் புரிந்த அவனுக்கு, சிவனின் அருளாசி கிடைத்ததுடன், சூரியனுக்கு அவனுடைய ஒளியிழக்கும்படியாக சிவனின் சாபம் கிடைத்தது.  சூரியன் ஒளியிழந்ததால் உலகம் இருளில் மூழ்கியது.

தன் ஒளியிழந்த சூரியன் மிக வருந்தி, பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து நித்தமும் வழிபாடு செய்ய, சிவன் மனம் இறங்கி, சூரியன் மீண்டும் ஒளிபெற அருள் புரிந்தார்.

சூரியனுக்கு அருள்புரிந்த சிவன் இத்தலத்தில் கஜபிருஷ்ட விமானக் கருவறையில் "மேகநாதன்' என்ற பெயரில் அருள்புரிகிறார்.  "மீயச்சூர்' என போற்றப்பட்ட திருத்தலமே "திருமீயச்சூர்' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிப்பதைப் பொங்கல் விழாவாகக் கொண்டாடினாலும்,  உண்மையில் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை ஏழாம் நாளான சப்தமி அன்றுதான் சூரியனின் தேரானது வடக்கு திசை நோக்கி திரும்புகிறது. இதை ரத சப்தமி, மகா சப்தமி, ஜெயந்தி சப்தமி என்று சொல்வர். சூரியனின் தேருக்கு மற்ற ரதங்களில் உள்ளது போல் இரண்டு பக்கங்களிலும் சக்கரங்கள் கிடையாது. ரதத்தின் மையப் பகுதியில் மட்டும் ஒரே ஒரு சக்கரம் உண்டு. இச்சக்கரத்தின் குடத்தில் மூன்று மேகலைகள் காலை, நண்பகல், மாலை ஆகியவற்றை குறிப்பதாகவும், ஒற்றைச் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் ஆறு பருவங்களைக் குறிப்பதாகவும், ரதத்தை இழுக்கும் ஏழு குதிரைகள், வானவில்லின் ஏழு நிறங்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இறைவனுடைய ஞானசக்திதான் சூரியன் என்றும் அந்த ஞானசக்தி வெளிப்பட்ட நாளே ரத சப்தமி தினம் என்றும் புராணம் கூறும். சூரியன் தோன்றியபோது, ஒளிக் கதிர்களின் வீச்சு அளவுக்கதிகமான உஷ்ணமும் ஒளியும் கொண்டிருந்ததால்,, ஈசனின் வேண்டுகோளுக்கிணங்க, விஸ்வகர்மா ரதசப்தமி தினத்தன்றுதான் அதை குறைத்ததாகவும் கூறப்படுகிறது. 
மகாபாரதப் போரில் அம்புப் படுக்கையில் வீழ்ந்த பீஷ்மர் தான் நினைத்தபோது உயிர் நீக்கும் வரம் பெற்றிருந்தவர். உத்ராயண காலத்தில் உயிர்விட எத்தனித்தபோது, அவர் உயிர் நீங்கவில்லை. அதற்கு அவருடைய வினைகள் காரணமாக இருப்பதாகத் தெரிந்து கொண்ட பின்னர் ரதசப்தமியன்று தன் அங்கங்களில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டதாகவும், அவை அவரின் பாவவினைகளைப் பொசுக்கிவிட்டதாகவும்,  மறுநாள் அஷ்டமியன்று அவர் உயிர்தியாகம் செய்தார் என்றும் மகாபாரதம் கூறுகிறது. அந்த தினமே "பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது.

தங்கள் பாவவினைகள் தீர, ரதசப்தமியன்று ஏழு எருக்கன் இலைகளை தலையில் வைத்துக்கொண்டு அவற்றின் மேல் சிறிது அரிசி, அருகம்புல் ஆகியவற்றை வைத்து சூரிய பகவானை நினைத்து நீராடுவது வழக்கமாக இருந்து வருகிறது. பெண்கள் சிறிது மஞ்சளையும் அதனுடன் சேர்த்து நீராட வேண்டும். நீராடல் முடிந்ததும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி சூரிய வழிபாடு செய்வதால் கண்ணொளி பிரகாசிக்கும். சரும நோய்கள் ஏற்படாது. புத்துணர்ச்சி உண்டாகும். சூரிய தோஷங்கள் நீங்கி சுகமான வாழ்வு கிட்டும். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.

ரத சப்தமியன்று (28.1.2023) பல திருத்தலங்களிலும் தீர்த்தவாரி உத்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு லலிதாம்பாள் சமேத அருள்மிகு மேகநாதசுவாமி அருள்புரியும் பாடல்பெற்ற திருத்தலமான திருமீயச்சூரில் ஏகதின பிரும்மோத்ஸவம் விமரிசையாக நடைபெற இருக்கிறது. அன்று நண்பகலில் பஞ்ச மூர்த்திகள் இடபவாகன ரூடராய் எழுந்தருளி சூர்ய புஷ்கரணியில் தீர்த்தம் கொடுத்தருளும் வைபவம் நடைபெற இருக்கிறது. அச்சமயம் சூர்யபுஷ்கரணியில் நீராடுவதால் நம் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். 

தொடர்புக்கு : 04366 -239170, 9443113025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com