

தாடகை என்ற பெண் மகப்பேறு விரும்பித் தவம் புரிந்தார். அப்போது, பிரம்மதேவன் தோன்றி, "நீ தாலவனத்துக்குச் சென்று பூஜித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய்' என பணித்தார். தாடகையும் அவ்வாறே தாலவனம் தலத்துக்கு வந்து, இறைவனைப் பூஜித்து வந்தாள்.
ஒருநாள் பூஜை முடிவில் இறைவனுக்கு மாலையை சாத்த முயன்றாள். அப்போது, அவளது அன்பை வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை நெகிழச் செய்தார். தாடகையும் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டதால், மாலை சாற்ற முடியாமல் வருத்தமடைந்தாள். "அண்ணலே! யாது செய்வேன்; எவ்வாறாயினும் இம்மாலையை ஏற்று அடியேனை ஆதரித்தருள வேண்டும்' என வேண்டினாள்.
இறைவனும் தனது தலையை சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார். பெருமானது கருணையை வியந்த அப்பெண், தனக்கு மகப்பேறு அளிக்குமாறு வேண்டினாள். பரமனும் "அவ்வாறே ஆகுக' எனப் பணித்து மறைந்தார். தாடகையும் கோயிலுக்கு வடபால் ஓர் தீர்த்தமைத்துத் தென் கரையிலே வீரியம்மனையும், கீழ்க்கரையில் வைரவரையும் காவலாகப் பிரதிஷ்டை செய்து வணங்கி மகப்பேற்றையும் அடைந்தாள்.
இத்தலத்து இறைவனின் தலை சாய்ந்திருப்பதை சோழ மன்னன் வீரசேனன் கேள்வியுற்று வருந்தினான். தனது படைகளை அனுப்பி இறைவனின் தலையை நிமிர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தான். சிவலிங்கத்துடன் யானையைக் கட்டி இழுத்தும் முயற்சி பயனளிக்கவில்லை.
இச்செய்தியை அறிந்த திருக்கடவூர் குங்குலியக்கலய நாயனார் இத்தலத்துக்கு வந்தார். தாமும் அத்திருப்பணியில் ஈடுபட விரும்பினார். யானைகளை அவிழ்க்கச் செய்து தம் கழுத்தில் அரிகண்டமும், இறைவன் கழுத்தில் மெல்லிய கயிறும் பூட்டி இழுத்தார். அரிகண்டம் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. குங்குலியக்கலய நாயனாரின் அன்புக்கு கட்டுப்பட்ட இறைவன், உடனடியாக தனது தலையை நிமிர்த்தினார். குங்குலியக்கலய நாயனாரின் பக்தியையும், இறைவனின் அன்பையும் கண்ட அரசன் வியந்து வணங்கினான்.
இதையும் படிக்க: திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் குடமுழுக்கு
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கும். செல்வத்தில் செழிக்க வேண்டும்; கல்வியில் சிறக்க வேண்டும்; அழகாக இருக்க வேண்டும்; ஞானம் கிடைக்க வேண்டும்; உயர் பதவிகள் வேண்டும். இப்படி ஏராளமான ஆசைகள். இந்த எல்லா ஆசைகளையும் ஒரே இடத்தில் ஒருவரிடம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அவர்தான் பெரும் கருணை உள்ளம் கொண்டு திருப்பனந்தாளில் கோயில் கொண்டுள்ள அருணஜடேஸ்வரர்.
இத்தலத்தில் வழிபட்டால் பொய் சொன்ன தோஷம் போகும்; பிரம்ம சாப நிவர்த்தி கிட்டும்; நவக்கிரக தோஷங்கள் போகும்; திருமணத் தடைகள் அகலும்; மணம் நடக்கும்; புத்திர பாக்கியம் கிட்டும்; நாகதோஷங்கள் நீங்கும்; குரு தோஷங்கள் அகலும்; ஞானமும் கல்வியும் கிடைக்கும்; சந்திர தோஷங்கள் அகலும்.
ஆதிசிவன் சிவகுரு. அவர் தட்சிணாமூர்த்தி குருவாக எல்லா கோயில்களிலும் இருப்பார். சில கோயில்களில் மூலவரே சிவகுருவாக இருப்பதும் உண்டு. சிவகுருநாதர், சிவயோகிநாதர் என்ற பெயர்கள் அவருக்கு இருக்கும். அதையொட்டி அவர் யோகியாக இருந்து அருள் செய்ததை விளக்கும் வரலாறுகளும் இருக்கும்.
ஆனால் திருப்பனந்தாளில் ஒரு வித்தியாசம். சுவாமி அருணஜடேஸ்வரர் குருவாக இருந்து அருள் செய்திருக்கிறார். சாதாரண நபர்களுக்கல்ல. ஞான சக்தியாக விளங்கும் சக்திக்கே குருவாக இருந்து உபதேசம் செய்ததால், அவர் அருணஜடேஸ்வரர் எனப்படுகிறார்.
பனையடியில் பெருமான் எழுந்தருளியிருந்தலால் ஊர் பனந்தாள் என்றும், வடமொழியில் தாலவனம் (தாலம் } பனை) எனவும், இத்தலம் தாடகை வழிபட்ட சிறப்பால் தாடகையீச்சரம் எனவும் அழைக்கப்படுகின்றன.
செல்லும் வழி: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சோழபுரத்துக்கும் அணைக்கரைக்கும் இடையில் இத்திருத்தலம் உள்ளது. இத்தல இறைவனை அருணஜடேஸ்வரர் என்றும், செஞ்சடையப்பர் எனவும் அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் பிரகன்நாயகி (பெரியநாயகி). தருமபுரம் ஆதீனத்தைச் சார்ந்த இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.