இரு வாசல்களில் பெருமாள் தரிசனம்...

திருச்சி-துறையூர் வழித்தடத்தில் திருவெள்ளறை திருத்தலம் அமைந்துள்ளது.
புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்
புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்
Published on
Updated on
1 min read

தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி மாதம் வரை "உத்தராயன புண்ணிய காலம்' என்றும் ஆடி முதல் மார்கழி மாதம் வரை "தக்ஷிணாயன புண்ணிய காலம்' என்றும் அழைப்பார்கள்.

சூரியன் வடக்கு நோக்கிய தன் பயணத்தைத் தொடங்குவது உத்தராயணத்தில்தான். "உத்தர' என்றால் வடக்கு. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தைத் தொடங்குவது தக்ஷிணாயன காலத்தில்தான். "தக்ஷிண' என்றால் தெற்கு. எவ்வளவு வைணவத் தலங்கள் இருந்தாலும் பெருமாளை வழிபட உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் என்று இரு வாசல் உள்ள ஒரு தலம் வேதகிரி ஷேத்திரம் என்ற திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்தான். மூலவர் நின்ற தவக் கோலம். கிழக்கே திருமுருக மண்டபம். தாயார் செண்பகவல்லி. பங்கயச் செல்வி என்ற பெயரில் தனிச் சந்நிதியும் உண்டு.

பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். ஏழு தீர்த்தங்கள் உள்ளன. பெரிய திருவடி, சிபி, பூதேவி, மார்க்கண்டேயர், லட்சுமி, ப்ருஹமருத்ராதிகள், பிரத்யஷம் என சிறப்புகள் கொண்டது. இங்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரையில் தக்ஷிணாயன வாசல் வழியாகவும் சென்று பெருமாளை வழிபட முடியும்.

இரவில் நேரம் கழித்து வந்த பெருமாளைத் தாயார், ""ஏன் இவ்வளவு நேரம்?'' என்று கேட்டதைக் குறிக்கும் வகையில், "நாழிகேட்டான் வாசல்' என்றொரு வாசல் உண்டு.

ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய-சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது இந்தக் கோயிலில் விசேஷம். இந்த ஷேத்திரத்தில் ஸகல ஆதித்யமும், பங்கயச் செல்வியுடையது.

உய்யக் கொண்டார் அவதரித்தது, நடாதுராம்மாளுக்கு "ஒப்பாரும் மிக்காரும் இல்லை' என்ற புகழ்மாலையைச் சூட்டும்படி அருள் செய்த மகானுபாவரான எங்களாழ்வன் அவதரித்தது, உடையவர் வைணவத்தை வளர்க்க வாசம் செய்தது, தேசிகன் சுவாமிகள் மங்களாசாசனம் செய்தது உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டது இந்தத் தலம்.

ஸ்ரீமணவாள மாமுனிகள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் பாசுரங்களைப் பாடியுள்ளனர். திருச்சி-துறையூர் வழித்தடத்தில் திருவெள்ளறை உள்ளது.

-கோவிந்தாபுரம் எஸ்.பி. பாலு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com