ஒருமுறை பிருங்கி முனிவர் வண்டு உருவத்தோடு சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனால் மனம் வருந்திய பார்வதி, "இனி இப்படி நிகழாமல் இருக்கத் தங்களின் உடலில் சரிபாதியைத் தாருங்கள்'' என வேண்டியபோது, சிவன் செவி மடுக்கவில்லை. இதற்காக, பார்வதி தவம் இருக்கத் தேடி வந்த இடம்தான் முனுகப்பட்டு.
வாழைமரங்களால் பந்தல் அமைத்துத் தவமிருக்க முடிவு செய்த பார்வதி, தனது புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டுவரப் பணித்தாள். விநாயகர் அருகேயிருந்த மலையில் முனிவர் தவமிருப்பதை அறிந்து, தனது வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் அங்கிருந்த கமண்டலத்தைக் கவிழ்த்தார். கமண்டல நீரும் கமண்டல நாக நதியாகி அன்னையிடம் பாய்ந்தது.
முருகன் அங்கிருந்த மலை மீது தன் வேல் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது "சேயாறு' ஆனது. (முருகனின் வேல் தவமிருந்த முனிவர்கள் மீது பாய்ந்ததால் நீர் சிவந்து ஓடிய தோஷம் நீங்க, அவர் சேயாறு கரையில் ஏழு இடங்களில் சிவாலயங்கள் அமைத்து வழிபட்டது மற்றொரு புராணக்கதை) . அதற்கு அன்னை தன் பிரம்பை பூமியில்அடித்து நீர் தோன்றியதால், பிரம்பக நதியானது. இந்த மூன்றும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடம் "முக்கூடல்'. "முக்கூட்டு' என்று அழைப்பர். சிவனை "முக்கூட்டு சிவன்' என்கின்றனர். அன்னையின் தவத்தைக் கலைக்க அசுரர்கள் முயன்றபோது, சிவன் வாழ்முனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதாரம் எடுத்தனர். தவம் நிறைவடைந்தவுடன், திருவண்ணாமலையில்,சிவனிடம் சரிபாதி உடலை பார்வதி பெற்றதாக ஐதீகம்.
கமண்டல நாகநதியின் தெற்கே, பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி கோயில் அமைந்துள்ளது. அருகே வாழ்முனி, செம்முனி, இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், குதிரை வடிவங்கள் பெரிய வடிவில் அமைந்துள்ளன. இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்துப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில், தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால் பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை.
பச்சையம்மன் கோயிலானது சிறிய ராஜ கோபுர வாயிலில் அமைந்துள்ளது. இந்திரனும் எதிரே உள்ள பாறையில் இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், ஈசான்ய மூர்த்தி, நந்தி வடிவங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. அடிவாரத்தில் சிறிய விநாயகர் சந்நிதி தெற்கு முகமாய் உள்ளது. இடதுபுறமாக வலம் வந்தால்அக்னி மூலை எனும் தென்கிழக்கில் அக்னிமுனியான அக்னி பகவானும், நவக்கிரகங்களாக நவமுனிகளும், அஷ்டதிக்கு பாலகர்கள் எனும் அஷ்டமுனிகளும், சப்தரிஷிகள்எனும் சப்தமுனிகளும்மேற்கு,வடக்குமுகமாய் பிரம்மாண்ட வடிவில் கம்பீரமாய்க் காட்சி தருகின்றனர்.
வலமாக வரும்போது மன்னார்சாமி எனும் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சிவனை லிங்க வடிவுக்குப் பதிலாக மனிதவடிவில் சிலா ரூபத்தில் காண்பது சிறப்பானது. இறைவன் நான்கு கரங்களோடு, கீழ்வலது கரத்தில் சூலம், கீழ் இடதுகரத்தில் கபாலம், மேல்வலது கரத்தில் மழு, மேல்இடதுகரத்தில் மானைத் தாங்கியும் கிழக்கு நோக்கியுள்ளார். இவரே "மன்னார் ஈஸ்வரன்' எனும் "மன்னார்சாமி'. இவரையடுத்து நடுநாயகமாய் பச்சையம்மன் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை முன் மண்டபத்தில் சப்தமாதர்கள், விநாயகர், முருகனும் வாயிலின் இருபுறமும் காட்சிதருகின்றனர். வாயில்காவலராக, வலதுபுறம் சிவனும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சிதருவது அபூர்வ நிலையாகும். இதனைக் கடந்து கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன்கள் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதை வடிவிலும் அமைந்துள்ளது. அன்னையின் கீழ்வலதுகரம் பிரம்பையும், கீழ்இடதுகரம் கபாலத்தையும், மேல்வலதுகரம்
அங்குசத்தையும், மேல்இடதுகரம் பாசத்தையும் தாங்கி, அருளாசி வழங்குகின்றன. சுதை வடிவ அம்மன், ஐதீகத்தை நினைவுப்படுத்தும் விதமாகப் பச்சைநிறத்தில் காட்சி தருகிறார். அன்னை தவமியற்றி பச்சை நிறம் கொண்டதால் இங்கு பச்சை நிற பிரசாதம் வழங்கப்படுகிறது. தலமரம் வெட்பாலை. தலத் தீர்த்தம் கோயிலுக்கு வடக்கே ஓடும் செய்யாறு ஆகும்.
பிரம்மோற்சவ விழா ஆடி, ஆவணியில் முதல் இரு வாரங்கள் வரும் திங்கள்கிழமைகளைச் சேர்த்து ஆறு திங்கள்கிழமைகள் கொண்டாடப்படும். ஏழாம் திங்கள்கிழமையன்று அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. பிரசாதமாக வேப்பிலையும், பச்சைநிற குங்குமமும் வழங்கப்படுகின்றன. ஏராளமானோருக்கு இது குலதெய்வம். பச்சையம்மன் மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வம். ஆரணி } செய்யாறு வழித்தடத்தில், முனுகப்பட்டு அமைந்துள்ளது.
} பனையபுரம் அதியமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.