

சென்னை மாநகரில் சிறப்பு மிக்க திருக்கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று, பாரிமுனை அருகே உள்ள தம்பு செட்டித்தெருவில் அமைந்துள்ள சித்தி புத்தி சமேத விநாயகர் திருக்கோயில். நாகப்ப செட்டியார் என்பவரால் கட்டப்பட்டதால், அருள்மிகு நாகப்பசெட்டி பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.
கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் விநாயகர் காணப்படுகிறார். கருவறை வெளிப்புறச் சுவரில் உள்ள அனைத்து தேவகோட்ட சிற்பத் திருமேனிகளும் கணபதி திருமேனிகளாக அமைந்து விளங்குகிறது.
முதலில் விநாயகர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவதாக நடனமாடும் கோலத்தில் நிருத்த கணபதி. மேற்கு தேவகோட்டத்தில் திருமால் போன்று மேலிரு கரங்களில் சங்கு } சக்கரமும், முன் கைகளில் தாமரை மலர்களைத் தாங்கி காட்சி அளிக்கும் கணபதி வடிவம் சிறப்பானது. அடுத்துள்ள தேவகோட்டத்தில் ஐந்து முகம் உடைய பஞ்சமுக கணபதியாகக் காட்சி தருகிறார். அடுத்த தேவகோட்டத்தில் லட்சுமி கணபதியாக தேவியை மடியில் வைத்திருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையைச் சுற்றி வரும்பொழுது ஒன்பது பலிபீடங்களையும், சண்டிகேசுவரரையும் காணமுடிகிறது. கருவறை நுழைவு வாயிலில் ருத்ரர்கள் துவாரபாலகர்களாகக் காட்சி தருகின்றனர். மேலும் இரண்டு பக்கங்களிலும் நாகங்களின் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்திருப்பது கோயிலுக்குச் சிறப்பினை தருகிறது.
இக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி போன்ற அனைத்து வழிபாடுகளும், விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் இங்கே சித்தி } புத்தி என்கிற இரு தேவியருடன் காட்சிதருவதால் திருமணத்தடை போன்ற இடர்ப்பாடுகளை அகற்றி நலமான, ஆனந்தமான வாழ்வு அருளுகிறார்.
கி. ஸ்ரீதரன்
(தொல்லியல்துறை } பணி நிறைவு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.