மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

மதுரை மாவட்டம் கோச்சடையில் அமைந்துள்ளது முத்தையா கோயில்.
மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்
Updated on
2 min read

மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடலுடன் தொடர்புடைய தலமான கோச்சடையில் அமைந்துள்ளது முத்தையா கோயில்.

தன் பக்தையான வந்தி என்னும் முதிய பெண்மணியை சிவலோகத்துக்குச் சேர்க்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் வைகை நதியைப் பெருகச் செய்தார். உடனே நகரில் உள்ளவர்கள் உடைந்த கரையை அடைக்க ஆரம்பித்தனர்.

பிட்டு விற்று உண்பவளும், பிட்டையே சிவனுக்கு நைவேத்யமாகப் படைப்பவளுமான வந்திக்காக சிவனே கூலியாளாக மண்கூடையை சுமந்து கொண்டு கரையை அடைக்காமல் இருந்தார். இதனால் பாண்டிய மன்னன் சிவனை கோவிச்சு அடித்ததால் "கோவிச்சடி' என்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் "கோச்சடை' என்று பெயர் திரிந்ததாகக் கூறப்படுகிறது . இந்த புனித மண்ணான கோச்சடையில்தான் புகழ் பெற்ற அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார், முத்தையா சுவாமி} நாகப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

மூலஸ்தானத்தில் மூலவராக வில்லாயுதம் உடைய அய்யனார் பூரண, புஷ்கலை சமேதராக கிழக்குப் பார்த்து அருள்பாலிக்கிறார். மேலும் மூலஸ்தானத்தின் முன்பு செண்பக பாண்டியன் காலத்தில் செண்பகத்தோட்டத்தில் கிடைத்த செண்பகவல்லி அய்யனார் உள்ளார் . இது பாண்டியர் கால புராதன கோயிலாகும்.

அய்யனார் மதுரை எல்லையின் காவல் தெய்வம். இங்கு திருமலை நாயக்கரால் இரண்டு குதிரையும் ஒரு பூதமும் முதலில் கட்டப்பட்டது. கூடவே சப்த கன்னியர் மற்றும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிலைகளும் இடம் பெற்றுள்ளன. இதே மண்டபத்தின் வலதுபுறம் ஐயப்பன் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.

நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஒரு புராதன பெருமை கொண்ட, பிரம்மாண்டமான புளிய மரம் உள்ளது. இதுவே தலவிருட்சம். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்கூறப்படுகிறது.

நாடெங்கும் பக்தர்கள் தாங்கள் வாழும் எல்லைப் பகுதிகளில் அய்யனார் திரு உருவை எழுப்பி, அவரை காவல் தெய்வமாக பூஜித்துவரலானார்கள். அப்படி கோச்சடை எல்லையில் நிறுவப்பட்டதே வில்லாயுதமுடையஅய்யனார் திருக்கோயில். இந்த ஆலயத்துக்கு, மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், வண்ணச் சுதையால் ஆன இரண்டு பெரிய குதிரைகள், பூத உரு ஆகியவற்றை திருப்பணியாகச் செய்து கொடுத்துள்ளார். அதனையடுத்து, இவ்வாலயம் விரிவுபெற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் பக்தர்கள் காரணமானார்கள்.

இந்த அய்யனாரிடம் அடைக்கலமானவரே முத்தையா சுவாமிகள். படிப்படியாக இவர், தனது திருவிளையாடல்களால் பக்தர்களின் மனதில் இடம் பெற்றுவிட அய்யனாரைவிட முத்தையா சுவாமி என்ற பெயரே முன்நிற்க ஆரம்பித்தது.

இந்தத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 3 நாள் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. உற்சவம் தொடங்குமுன் முதல் மாதம் கோச்சடை பக்தர்கள் முத்தையா சுவாமி கோயிலிலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ள சாவடி மண்டபத்தில் கூடுவார்கள். அப்போது யார் வாயிலிருந்தாவது "இன்ன தேதியில், இத்தனை மணிக்கு நாம் முத்தையா சுவாமி ஆலய பனை மரத்தின் கீழ் கூடுவோம்' என அருள்வாக்கு வரும்.

அப்படி சபை கூட, அப்போது பல்லி சப்தம் கேட்டால், அந்த ஆண்டு பிரம்மோற்சவம் நடக்கும். இப்படி பல்லி வாக்குக் கிடைக்கும் வரை, அதாவது அதிகபட்சமாக ஐந்து வாரங்கள் சபையினர் கூடுவர். அப்படி வாக்குக் கிடைக்காவிடில் அந்த ஆண்டு புரட்டாசி விழா நடத்தப்படாமலும் போகும். இது தற்போதும் நடைமுறையில் உள்ளது.

பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறிய பிறகு இங்கு வீற்றிருக்கும் கருப்பனுக்கும், அய்யனாருக்கும் ஆட்டுக்கிடா, சேவல் போன்றவற்றை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வணங்குகின்றனர்.

மணப்பேறு, மகப்பேறு உள்பட பல்வேறு பிரார்த்தனைகளுக்குச் சிறந்த பரிகாரத் தலமாக இக்கோயில் விளங்குகிறது. நாகதோஷம் நீங்கிட புளியமரத்தின் அடியில் உள்ள நாகம்மனுக்கு பால் ஊற்றியும், திருமண வரம் வேண்டுவோர் தாலிக்கயிறும், குழந்தை வரம் வேண்டுவோர் சேலைத்துணியால் இம்மரத்தில் தொட்டில் கட்டியும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். முத்தையா சுவாமியின் பக்தர்கள் தங்கள் வீட்டு திருமணம் மற்றும் காதுகுத்தும் வைபவங்களை இந்தக் கோயிலிலேயே நடத்திக் கொள்கிறார்கள்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

- சோழவந்தான் ஜெனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com