பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்குவீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் காலத்தில் இக்
கோயிலுக்கென புதிய ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. அதன் நினைவாக ராஜகோபால சுவாமி கோயில் நுழைவாயிலின் இருபுறமும் ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்நியர் படையெடுப்பின்போது இக்கோயிலில் மூலவரான ராஜகோபால சுவாமி சிலைகள், உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன் காரணமாக பல்லாண்டுகளாக மூலவர் இன்றி கருவறை காணப்பட்டது.
தஞ்சையில் மராட்டிய ஆட்சி முடிவு பெற்றதும், கடைசி மன்னராகிய சிவாஜியின் மனைவி காமாட்சி பாய் சாகேப் 1881}இல் இக்கோயில் கருவறையில் நூதனமாக விஜயவல்லி, சுதர்சன வள்ளி சமேதராக ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், கோயிலின் பின்புறத்தில் தனி மண்டபம் அமைத்து, அதில் சிவபெருமானின் மறு அம்சமாக விளங்கும் சிவேந்திரரையும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
இத்தகவலை தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். புதியதாக சக்கரத்தாழ்வார் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டாலும், ராஜகோபால சுவாமி கோயில் என்றே இது அழைக்கப்படுகிறது.
கிழக்கு நோக்கிய வண்ணம் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், சிறிய கோபுரம் உள்ளது. இவ்விரு கோபுரங்களையும் கடந்து சென்றால் பலிபீடம், கருடாழ்வார் சந்நிதியும், அலங்கார மண்டபத்தைக் கடந்து சென்றால் மூலஸ்தானமும் அமைந்துள்ளது.
பெரும்பாலான கோயில்களில் சக்கரத்தாழ்வார் தனி சந்நிதி கொண்டிருப்பார். ஆனால், இக்கோயில் கருவறையில் விஜயவல்லி, சுதர்சன வள்ளி சமேதராக ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, பக்தர்களுக்கு பதினாறு வகையான செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறார்.
சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் யோக நரசிம்மருக்குப் பதிலாக ராஜகோபுரத்தின் பின்புறம் வலதுபுறத்தில் யோக நரசிம்மரும், இடதுபுறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றனர். இந்த இரு நரசிம்மர்களும் நேர்கொண்ட பார்வையாக சக்கரத்தாழ்வாரை பார்த்த வண்ணம் இருப்பது தனிச்சிறப்பு. இங்கு பக்தர்கள் முதலில் இவ்விரு நரசிம்மர்களையும் தரிசனம் செய்த பின்பு, மூலவர் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வது வழக்கம்.
மேற்குப் புற மண்டபத்தில் மராத்தியர்களின் வழிபாட்டு தெய்வமான சிவேந்திரர் கங்கை, பார்வதி தேவியருடன் காணப்படுகிறார். இவருக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. அருகில் தலவிருட்சமான அத்தி மரமும், வடக்குப் புறத்தில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் நூற்றுக்கணக்கான கற்சிலைகளும் காணப்படுகின்றன. அதனையொட்டியவாறு உள்ள மண்டபத்தில் பகுளாமுகி காளியம்மன் சந்நிதி உள்ளது.
தஞ்சாவூரில் சோழர்கள் எட்டுக் காளியம்மன்களை எல்லை தெய்வமாக வழிபட்டார்கள். அந்த எட்டுக் காளியம்மன்களுள் ஒன்றாக இத்தலத்தில் உள்ள பகுளாமுகி காளியம்மன் திகழ்கிறார். இவர் அருகிலேயே தஞ்சையில் மிக உயரமான சிவ துர்கை, விஷ்ணு துர்கை, கோலாலம்பூர் மகாலட்சுமி சிலைகளும், மேலும் சப்தகன்னியர், பைரவர், மார்த்தாண்ட பைரவர் சிலைகளும் உள்ளன.
விசாலமான பிரகாரத்தில் பக்தர்கள் ஒரு மண்டலம் 9, 12, 24 என விருப்பப்பட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இங்கு பக்தர்கள் பிரதோஷம், சித்திரை நட்சத்திரம், சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அமாவாசை, பெüர்ணமி நாளில் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
மூலவர் சக்கரத்தாழ்வாருக்கு பக்தர்கள் உப்பு, மிளகு,வெல்லம் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இவரை சர்க்கரை நோய், மன நோய் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டோர் வழிபட்டால் வாழ்வில் நிம்மதி பெறலாம். பகைவர் பயமின்றி ஆனந்தமாக வாழ்வார்கள். இத்தலத்தில் பிரதி சித்திரை நட்சத்திரத்தன்று மூலஸ்தானத்தில் பதினாறு கரங்களுடன் திகழும் மூலவர், உற்சவர், அஷ்ட புஜ சக்கரத்தாழ்வார் ஆகிய மூவரும் ஒருசேரக் காட்சியளிப்பார்கள்.
அன்றைய தினம் காலையில் திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் மாலையில் பரிகார அர்ச்சனையும் தீபாராதனையும் நடப்பது வழக்கமாகும். மூன்று சக்கரத்தாழ்வாரையும் பக்தர்கள் தரிசனம் செய்தால் முன்ஜென்ம பாவங்களும் தோஷங்களும் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் கிட்டும்.
ஆண்டுதோறும் இத்தலத்தில் சுதர்சன ஜெயந்தியன்று காலை சுதர்சன ஹோமமும், மூலவருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மாலை நான்கு ராஜ வீதிகளிலும் உற்சவர் அஷ்ட புஜ சக்கரத்தாழ்வார் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.
தரிசனத்துக்காக காலை 7 மணி முதல் பகல் 12 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும் இக்கோயில், தஞ்சாவூர் அரண்மனை, காமராஜ் காய்கறிகள் சந்தை அருகில் வடக்குவீதி ராஜகோபால சுவாமி தெருவில் அமைந்துள்ளது.
- தஞ்சாவூர் இரா.சுரேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!

புத்துமாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



