புரட்டாசி சனிக்கிழமை மகிமை!

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பாவங்களை நீக்கி, வாழ்க்கையில் ஒளிமயத்தை பெறலாம்..

Published On :

புரட்டாசியில் அலைமகள், கலைமகள், மலைமகளுக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளைப் போற்ற ஏற்ற மாதமாகும். ஆண்டு முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கவில்லை என்றாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் விரதம் இருந்தால், அத்தனை பாவங்களும் நீங்கி, பன்னிரண்டு மாதங்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். இம்மாதத்தில் சனி பகவான், வெங்கடேசனின் பக்தர்களின் பாவங்களை குறைத்து அருள்பாலிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் மயானத்தில் பிணங்களை எரியூட்டுகின்ற நிலை எத்தகைய கொடியது? மனைவியைப் பிரிந்து மகனை இழந்த சோகம் அவர் மனதை வருத்தியது.

"நான் என்ன பாவம் செய்தேன்?' என்று அவர் மனதோடு புலம்பிக் கொண்டு செல்லும்போது கெüதம முனிவரைப் பார்க்கிறார்.

அவர் திருவடியை வணங்கி, ""முனிவரே! நான் செய்த பாவம் என்ன? பூர்வ கர்மாவினால் நான் அனுபவிக்கின்றேன் என்பது தெரிகின்றது. இருப்பினும், இதிலிருந்து நான் விடுபட என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

முனிவர், "அஜா ஏகாதசி நோன்பிருந்தால் இழந்த செல்வங்கள் அத்தனையும் பெறுவாய். இதை நீ கடைப்பிடித்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். உன்னுடைய வருத்தம், துயர் எல்லாம் நீங்கிவிடும்'' எனக் கூறினார்.

இந்த ஏகாதசியை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், பாலும் பழமும் உண்டு, இறைவனுடைய நாமத்தை மட்டும் கூறலாம். இன்றைய காலச் சூழலில் பணிக்கு ஓடுகின்றவர்களுக்கு இந்த பவித்திரமான ஏகாதசிகளை கடைப்பிடிப்பது சற்று கடினம். ஆகவே நம்மால் முடிந்தது, திருமாலின் நாமங்களை உச்சரிப்பது, நெய் விளக்கேற்றி

கற்பூரம் காட்டி வணங்குவது.

ஏகாதசிக்கு முதல் நாளே துளசியைப் பறித்து, அர்ச்சித்து, துளசி மாலையை விஷ்ணுவுக்கு சாத்தி, துன்பக் கடலில் இருந்து மீளலாம். இந்த ஏகாதசியைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும், இக் கதையைப் படிப்பது அல்லது மற்றவருக்குக் கதையைக் கூறுவது என்ற செயலில் ஈடுபட்டாலும் நன்மைகள் உண்டு. பாவம் நீங்கும், செல்வம் கிடைக்கும், மோட்சம் நேரடியாகக் கொடுக்கக் கிடைக்கும். அடுத்தது அஸ்வமேத யாகம் செய்த பலன் நமக்குக் கிடைக்கும்.

பஞ்சாமிர்தம், துளசி, பழம், பாயசம் போன்றவற்றை நிவேதனமாக விஷ்ணு பகவானுக்கு வைத்து வணங்கலாம். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ' என்ற நாமத்தை விடாமல் நம் இதழ்கள் உச்சரிக்க, நம் பாவங்கள் மலையாக இருந்தாலும் பனியாகக் கரையும்.

புரட்டாசி சுக்லபட்ச ஏகாதசி பத்மநாபா ஏகாதசி. இதைக் கடைப்பிடித்தால், நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பஞ்சம் நீங்கும். வாழ்வுக்கு ஆதாரமான நீர்நிலை நிறைவாகக் கிடைக்கும்.

மாந்ததாதா என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. காட்டில் தியானம் செய்த முனிவரிடம், ""என் ஆட்சியில் யாவரும் பிழை செய்யவில்லையே, அப்படி இருக்கின்ற பொழுது என்னுடைய ஆட்சியில் ஏன் பஞ்சம் ஏற்பட்டது?'' என்றார்.

"உன்னுடைய ஆட்சியில், பிராமணன் ஒருவன் பிறருடைய தர்மத்தைக் கையாண்டான். அவன் செய்த தவறு அந்தப் பிழையினால்

வருணனும், இந்திரனும் கோபம் கொண்டு உன் நாட்டுக்கு மழை பொழியவில்லை. மழை இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டது'' என்று முனிவர் கூறியதும், ""நான் அதற்கு என்ன செய்வேன்?'' என்று முனிவரிடம் கேட்டான்.

"நீ பலவிதமான மலர்களைக் கொண்டு திருமாலை வணங்கினால், உன்னுடைய நாடு செழிப்புடன் திகழும்'' என்றார். அவ்வாறே மன்னர் பலவித மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்து, அதன் மூலம் சாப விமோசனம் பெற்றார்.

நாட்டில் இந்திரனும், வருணனும் மனம் குளிர்ந்து மழை பொழிந்தனர். பூமி நனைந்தது, பயிர் செழித்தது, வறுமை நீங்கியது, மக்கள் மனதில் நிம்மதி செழித்தோங்கியது. இவ்விதமாக பத்மநாபா ஏகாதசியைக் கடைப்பிடித்தோர் வீடுகளில் அடிக் குழாய் கிணறு போன்ற நிலைகளில் நீர் பற்றாக்குறை இல்லாமல் கோடை காலத்திலும் தண்ணீர் பொங்கி வழியும்.

பெரியாழ்வார் எந்த மலர்களையெல்லாம் கொண்டு கண்ணனுக்கு அர்ச்சனை செய்தார் என்பதை பத்துப் பாசுரங்களில் பாடியிருக்கின்றார்.

"பொன்னுருக வெய்யில் காய்ந்து மண்ணுருக மழை' என்பது

பழமொழி. இந்நுட்பமான தட்பவெப்பநிலை மாறி தண்ணீரின் மூலம் கால்நடைகளுக்கு நோய்கள் பரவும். இந்த நேரத்தில் அசைவம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

- பொன்முகரியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.