நவாஸ் ஷெரீஃப் பதவி பறிப்பு: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.


ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீஃப் வேறு வழியின்றி ராஜிநாமா செய்துள்ளார்.
பொருளாதார ரீதியிலான பின்னடைவு, தலைதூக்கும் பயங்கரவாதம் போன்றவற்றால் பல்வேறு பிரச்னைகளை பாகிஸ்தான் சந்தித்துவரும் நிலையில், நவாஸ் ஷெரீஃபின் பதவி விலகல், அந்நாட்டு அரசியலில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
பனாமா நாட்டைச் சேர்ந்த "மொசாக் பொன்சேக்கா' என்ற சட்ட நிறுவனத்திடம் இருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கசிய விடப்பட்டன. "பனாமா ஆவணங்கள்' என்று அழைக்கப்படும் இவற்றை வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கம் வெளியிட்டது. அதில், நவாஸ் ஷெரீஃப்பும், அவரது குடும்பத்தினரும் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்திருந்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அதில், லண்டனில் பல கோடிரூபாய் மதிப்புடைய 4 பிளாட்டுகளும் அடங்கும்.
இதனிடையே, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப், அவரது குடும்பத்தினருக்கு எதிராக பனாமா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், அவாமி முஸ்லிம் லீக், ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகள் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக் குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீஃப், அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை கடந்த 21-ஆம் தேதியுடன் முடிந்தது.
பிறகு, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதில், பாகிஸ்தான் அரசமைப்புச் சட்ட விதி எண் 62 மற்றும் 63-இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் நவாஸ் ஷெரீஃப்பை தகுதியிழப்பு (தகுதிநீக்கம்) செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நவாஸ் ஷெரீஃப், அவரது வாரிசுகளுக்கு (மகன்கள் ஹுசேன், ஹாசன், மகள் மரியம்) எதிராக 6 வாரத்துக்குள் ஊழல் வழக்குகளை பதிவு செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
நிதியமைச்சர் இசாக் தார், நவாஸ் ஷெரீஃபின் மருமகனும், பாகிஸ்தான் தேசிய சபையின் உறுப்பினருமான முகம்மது சப்தார் ஆகியோரும், தற்போது அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து தகுதியிழப்பு செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் ராஜிநாமா செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 70 ஆண்டுகால பாகிஸ்தான் வரலாற்றில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஒருவரை தகுதியிழப்பு செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இது 2-ஆவது முறையாகும்.
இதற்கு முன்பு, கடந்த 2012-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் யூசுப் ரசா கிலானியை நீதிமன்றத்தை அவமதித்த காரணத்துக்காக தகுதியிழப்பு செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரதமராகிறார் நவாஸ் சகோதரர்?
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக உள்ளார். அவர் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்படும் வரையிலும், இடைக்காலத்துக்கு பிரதமராக ஒருவர் இருப்பார். அதைத் தொடர்ந்து, ஷாபாஸ் பிரதமராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடக்கம்தான்: இம்ரான் கான்
நவாஸ் ஷெரீஃப் உச்ச நீதிமன்றத்தால் தகுதியிழப்பு செய்யப்பட்டதை, வெறும் தொடக்கம்தான் என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவரும், 3 மனுதாரர்களில் ஒருவருமான இம்ரான் கான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாகிஸ்தான் மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. நவாஸ் குடும்பத்தை 40 ஆண்டுகளாக தெரியும். எனக்கும், அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பகை கிடையாது' என்றார்.
மீண்டும் பிரதமராவார் நவாஸ்: மகள் கருத்து
பாகிஸ்தான் பிரதமராக 4ஆவது முறையாக மீண்டும் நவாஸ் ஷெரீஃப் பதவியேற்பார் என்று அவரது மகள் மரியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "மக்களால் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு பிரதமர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வரும் 2018ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு தற்போது அடித்தளம் போடப்பட்டுள்ளது. அவரை யாரும் தடுக்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று முறையும் பதவிக் காலத்தை நிறைவு செய்யாத ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் பதவியை முழுகாலமும் வகிக்காமல், பாதியிலேயே நவாஸ் ஷெரீஃப் பதவியை இழப்பது இது 3-ஆவது முறையாகும்.
இதற்கு முன்பு, கடந்த 1990-ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற நவாஸ் ஷெரீஃப் 1993-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபர் குலாம் இஷாக் கான், நாடாளுமன்றத்தை கலைத்ததால், பாதியிலேயே ராஜிநாமா செய்தார். பின்னர், கடந்த 1997-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். 1999-ஆம் ஆண்டில் அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி முஷாரஃப், ரத்தமில்லா புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, ஷெரீஃப்பை வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து, நவாஸ் தற்போது 3-ஆவது முறையாக முழுப் பதவி காலத்தையும் வகிக்காமல் பதவி விலகியுள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை...
ஏப்ரல் 4, 2016: பனாமா நாட்டின் பொன்சேக்கா சட்ட நிறுவனத்திடம் இருந்து கசிந்த, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் வரி ஏய்ப்பு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டது. அதில், நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினரும் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
நவம்பர்1:
பனாமா ஆவணங்களின் அடிப்படையில் நவாஸ் ஷெரீஃபிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு. கூட்டு விசாரணைக் குழு அமைப்பு.
ஜூன் 13, 2017:
கூட்டு விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், விசாரணைக்கு நவாஸ் ஷெரீஃப் அரசு இடையூறு ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஜூன் 15:
கூட்டு விசாரணைக் குழு முன் நவாஸ் ஷெரீஃப் ஆஜர்.
ஜூலை 5:
ஷெரீஃபின் மகள் மரியம், கூட்டு விசாரணைக் குழு முன் ஆஜர்.
ஜூலை 10:
கூட்டு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் .
ஜூலை 28:
நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு உத்தரவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...