மாலத்தீவில் அவசர நிலைப் பிரகடனம்
அரசியல் குழப்பம் நிலவும் மாலத்தீவில் 15 நாள்களுக்கு அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் திங்கள்கிழமை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பை அதிபரின் உதவியாளர் அஜிமா


அரசியல் குழப்பம் நிலவும் மாலத்தீவில் 15 நாள்களுக்கு அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் திங்கள்கிழமை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பை அதிபரின் உதவியாளர் அஜிமா சுக்கூர் அறிவித்தார்.
மாலத்தீவில் சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுதாககக் கூறி, அந்த உத்தரவை செயல்படுத்த அதிபர் மறுத்துவிட்டார். அதனால், உச்ச நீதிமன்றத்துக்கும், மாலத்தீவு அரசுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், அந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு அப்துல்லா யாமீன் 3 கடிதங்களை திங்கள்கிழமை அனுப்பினார். அதில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், மக்களின் நலனுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய இந்த உத்தரவை நீதிமன்றம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில், அவசர நிலைப் பிரகடனச் செய்தியை அதிபரின் உதவியாளர் அஜிமா சுக்குர், அரசு தொலைக்காட்சியில் வாசித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து, சந்தேக நபர்களைப் பிடித்து வைக்கவும், அவர்களைக் கைது செய்யவும் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான அவசர நிலையை அதிபர் பிரகடனப்படுத்தினாலும், அதை 2 நாள்களில் நாடாளுமன்றத்தில் முறையாக அறிவிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிபர் யாமீன், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன், தன்னைக் கொலை செய்வதற்கு சதி நடப்பதாகக் கூறி, கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இந்நிலையில், மாலத்தீவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிச் சூழலை கருத்தில் கொண்டு அங்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சீனாவும், இந்தியாவும் தங்களது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...