விசா நடைமுறையில் ட்ரம்ப் செய்த அதிரடி மாற்றம்: இந்தியாவுக்குத் திரும்பும் ஏழு லட்சம் இந்தியர்கள்? 

அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்-1 பி விசா நடைமுறைகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள மாற்றங்களின் காரணமாக, ஏழு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம்...
விசா நடைமுறையில் ட்ரம்ப் செய்த அதிரடி மாற்றம்: இந்தியாவுக்குத் திரும்பும் ஏழு லட்சம் இந்தியர்கள்? 

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்-1 பி விசா நடைமுறைகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள மாற்றங்களின் காரணமாக, ஏழு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது    

அமெரிக்காவில் தங்கிப் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டினருக்கு என 'எச்-1 பி' விசா வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணி புரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி விசாவை நீடித்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக ஒருவர் ஆறு வருடங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்ற முடியும்.

பின்னர் அங்கு நிரந்தரமாக தங்கிப் பணியாற்ற விரும்புவோர், அமெரிக்க குடியுரிமைக்காக 'கிரீன் கார்டை' விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். 6 ஆண்டு பணியாற்றும் நபர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் கூட ஒவ்வொரு நாட்டிற்கும் எத்தனை கிரீன் கார்டு வழங்குவது என்பது உள்ளிட்ட நடைமுறை கட்டுப்பாடுகளை அமெரிக்கா வைத்துள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் தேர்தலில் போட்டியிடும் போதே வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வேலை வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.  அதன்படி தற்பொழுது எச்-1 பி விசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி  எச்-1 பி விசா பெற்ற நபர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டால், க்ரீன் கார்ட் கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது. எனவே 6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். அவருக்கு கிரீன் கார்டு கிடைத்தவுடன் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து பணியை தொடரலாம். இதன் காரணமாக 6 ஆண்டு பணிபுரிந்தவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.

அத்துடன் எச்1 பி விசா பெற்ற ஆணோ, பெண்ணோ தங்கள் கணவர் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு தங்களுடன் அழைத்து வரலாம். அவர்களுக்கு 'எச்-4 இ.ஏ.டி.' என்ற விசா வழங்கப்படுகிறது. இந்த விசா வைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவில் பணியாற்றி கொள்ளலாம். இப்படித்தான் இந்தியாவில் இருந்து செல்லும் கணவன்& மனைவி இருவரும் அங்கு பணியாற்றுகிறார்கள்.

தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள்ள புதிய விசா நடைமுறைகளின் படி, வழங்கப்பட்ட எச்-4 இ.ஏ.டி. விசாக்களை திரும்பப் பெறும்படியும்  உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கடுமையான நடைமுறைகளால் எச்-1 பி. விசா பெற்று 6 ஆண்டுகள் பணி முடித்தவர்களும், எச்-4 இ.ஏ.டி. விசா வைத்திருப்பவர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இத்தகைய விசாக்களை பெற்று பணியாற்றுபவர்களில் இந்தியர்கள்தான் அதிக அளவில் காணப்படுகிறார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 85 ஆயிரம் பேருக்கு எச்-1 பி. விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில். பாதி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக புதிய விசா நடைமுறை மாற்றங்களின் காரணமாக ஏழு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நெருக்கடி நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com