
புது தில்லி: தடை செய்யயப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க கோரிய ஹபீஸ் சயீத்தின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். அந்தத் தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் துணை நிறுவனரான ஹபீஸ் சயீத்தை நீதியின் முன்னிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தயாரித்து, திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுத்தியதாக அவர் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே, ஜமாத்-உத்-தவா, பலாஹ்-இ-இன்சானியத் ஆகிய 2 அமைப்புகளை ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கங்களை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தனது கண்காணிப்பு பட்டியலின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் ஹபீஸ் சயீத்தை தடை செய்யயப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலிலும் சேர்த்தது.
இந்நிலையில் தடை செய்யயப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க கோரிய ஹபீஸ் சயீத்தின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.
இதுதொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முடிவானது ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஹபீஸ் சயீத்தின் வழக்குரைஞரான ஹைதர் ரஸுல் மிர்சாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜெ.இ.எம் நிறுவனரான மசூத் அசாரை தடை செய்யயப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்குமாறு இந்தியா கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.