
லண்டன்: தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றத்துக்காக, விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு சுமார் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணினி நிபுணரான ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கி, அதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு, பல தவறுகளை அம்பலப்படுத்தினார்.
இதற்கிடையே, ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பாக பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்ற அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே கடந்த 2012-ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார். ஈக்வடார் அரசும் அவருக்கு அடைக்கலம் அளித்தது. அதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக ஜூலியன் அசாஞ்சே அந்தத் தூதரக வளாகத்தில் வசித்து வந்தார்.
இதற்கிடையே, ஈக்வடாருக்கும், ஜூலியன் அசாஞ்சேவுக்கும் அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. தூதரக வளாகத்தில் தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக அசாஞ்சே குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழலில், அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈக்வடார் அரசு விலக்கிக் கொண்டதையடுத்து கடந்த 11-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் வழக்கை ஸ்வீடன் கைவிட்ட நிலையிலும், அந்த வழக்குத்
தொடர்பான ஜாமீன் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் போலீஸார் அவரை தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவரது கைதின்போது லண்டன் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் அரசு அளித்து வந்த அடைக்கலம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து, லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரது அழைப்பின் பேரில், அந்தத் தூதரகத்திலிருந்து அவரை பெருநகர காவல்துறையினர் கைது செய்தனர்.
வழக்கு ஒன்றில் அசாஞ்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி பிறப்பித்த கைது உத்தரவின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர். மத்திய லண்டன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றத்துக்காக, விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு சுமார் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதனன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.