ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை!
By DIN | Published on : 03rd December 2019 04:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கோப்புப்படம்
ஈரான் கடற்படை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மூவர் இன்று (செவ்வாய்) நாடு திரும்புகின்றனர்.
சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த ஜாபர் அல்ப்கனுக்குச் சொந்தமான இயந்திரப் படகில் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பணியாற்றி வந்தனர். மூவரும் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது, ஈரான் கடற்படை அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து இந்திய மீனவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,
"தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மூவர் சவூதி அரேபியா மீன்பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் இவர்களுடைய மீன்பிடி கப்பலை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதினார். அதில், மூன்று மீனவர்கள் விடுதலை அடைந்து தாய் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இதன் அடிப்படையில் ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த இருதயராஜ், கிரீட்வின் மற்றும் பிரதீப் ஆகிய 3 மீனவர்களைக் கண்டறிந்தோம். இந்நிலையில், தெஹ்ரானில் உள்ள நமது தூதரக உதவியுடன் 3 மீனவர்களும் இன்று இந்தியா திரும்புகின்றனர்" என்றார்.