
பயங்கரவாதத்தை ஊக்குவித்து, உதவியளித்து, நிதியுதவி செய்யும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அக்கறை செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்டெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிப் பேசினார்.
பயங்கரவாதம் முற்றிலும் ஒழிந்துபோன ஒரு சமுதாயத்தை உருவாக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த ஞாயிறன்று இலங்கைக்குச் சென்ற போது கொழும்புவில் அந்தோணியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலின் மூலம் பயங்கரவாதத்தின் கோர முகத்தைப் பார்க்க முடிந்தது என்று பேசினார்.
முன்னதாக, பிரதமர் மோடி கஜகஸ்தான் அதிபர் கஸ்யம் - ஜோமர்ட் டோகாயேவ், இரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானியை சந்தித்துப் பேசினார்.
சீன அதிபருடனான சந்திப்பின் போது, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் உறுதியான நடவடிக்கைக்குப் பிறகே இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.