நோபல் பரிசு வென்ற தம்பதியரின் பட்டியலில் 6வது இடம் பிடித்த அபிஜித் - எஸ்தர்! அதிலும் ஒரு அதிசயம்?

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான
நோபல் பரிசு
நோபல் பரிசு

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கணவர்-மனைவியாவர்.

அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதியர், நோபல் பரிசு வென்ற தம்பதிகளின் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இளம் வயதில் நோபல்: இதில் அபிஜித் - எஸ்தர் தம்பதி அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) பணியாற்றி வருகின்றனர். கிரெமர் (54), ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். எஸ்தர் டஃப்லோ, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண். மேலும், மிக இளம் வயதில் (46) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு நோபல் பரிசு வென்ற தம்பதிகளைப் பார்க்கலாம்.

மே - பிரிட் மோசர் - எட்வார்ட் மோசர்  இணை 2014ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட தம்பதியராவர். மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே - பிரிட் மோசர் - எட்வார்ட் மோசர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1947ம் ஆண்டு மருத்துவத் துறையில் கார்ல் பெர்டினன்ட் கோரி - கெர்டி தெரசா கோரி தம்பதியருக்கு நோபல் பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டனர்.

கதிர்வீச்சின் தாக்கம் உள்ளிட்ட பல சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக 1903 மேரி - பெர்ரி க்யூரி தம்பதிக்கு இயற்பியலுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் இருவருக்குமே உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டாலும், விடாமல் ஆராய்ச்சி செய்தனர். இவர்களது கண்பிடிப்புகள்தான் பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு பெரும் உதவி செய்தது.

தாயைப் போல பிள்ளை என்பது போல, மேரியைப் போலவே அவரது மகள் இர்னி க்யூரி 1935ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை தனது கணவர் ஜோலியட்டுடன் பகிர்ந்து கொண்டார். 

அந்த அதிசயம் இதுதான்..


வேறுவேறு காரணங்களுக்காக, வேறு வேறு ஆண்டுகளில் நோபல் பரிசு வென்று நோபல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தவர்கள் ஆல்வா மிர்டெல் - குன்னார் மிர்டெல்ஸ் தம்பதியர். 1974ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை குன்னார் மிர்டெல்ஸும், 1982ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஆல்வா மிர்டெலும் பெற்றனர்.

தற்போது 2019ம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ்-அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ தம்பதியர் பெற்றுள்ளனர்.

பொருளாதாரத் துறையில் சாதித்த பெண்: நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்தர் கூறுகையில், "இப்போது பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் என்றாலும், பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. எனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதன் மூலம் இத்துறையில் பெண்களுக்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படும் என்று நம்புகிறேன். இதன் மூலம் பெண்களின் மதிப்பு சர்வதேச அளவில் மேலும் அதிகரிக்கும். எங்கள் பணிக்கு மிக உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com