பொருளாதாரம்: அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர்
பொருளாதாரம்: அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கணவர்-மனைவியாவர்.
 சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்களது பொருளாதார ஆய்வு சிறப்பாக உதவியதை கெளரவித்து நோபல் பரிசுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இளம் வயதில் நோபல்: இதில் அபிஜித் - எஸ்தர் தம்பதி அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) பணியாற்றி வருகின்றனர். கிரெமர் (54), ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். எஸ்தர் டஃப்லோ, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண். மேலும், மிக இளம் வயதில் (46) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
 இந்த நோபல் பரிசுடன் 9,18,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6.53 கோடி), தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் அடங்கும். பரிசுத் தொகை மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
 இந்த மூவரின் பொருளாதார ஆய்வுகளைப் பின்பற்றும் நாடுகள் வறுமை ஒழிப்பில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் அடிப்படையில் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டாலே, ஒரு நாடு முன்னேற்றப் பாதைக்குத் திரும்பிவிடும். எனவே, வறுமை ஒழிப்பு சார்ந்த பொருளாதார ஆய்வில் முக்கியப் பங்காற்றிய மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இவர்களின் பொருளாதார ஆய்வு முறை மூலம் இந்தியாவில் சுமார் 50 லட்சம் சிறார்கள் பள்ளிக் கல்வி பெற்றுள்ளனர். இது நேரடியாக கிடைத்த பலனாகும். இது தவிர சுகாதாரத் துறையிலும் இவர்களின் பொருளாதாரத் திட்டங்கள் பயனளித்துள்ளன. முக்கியமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய்களைத் தடுப்பதற்கான மானியத் திட்டம் தொடர்பான ஆய்வு பல நாடுகளில் சிறப்பான பலனை அளித்துள்ளது.


 மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்: அபிஜித் பானர்ஜி (58) மேற்கு வங்கத்தில் பிறந்தவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்த அபிஜித், பின்னர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், 1988-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். வளர்ச்சிப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவரான பானர்ஜி, தற்போது மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.
 கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையத்தை உருவாக்கினார். இதில் பானர்ஜியின் மனைவி எஸ்தர், தமிழகத்தைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார நிபுணருமான செந்தில் முல்லைநாதன் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். ஐ.நா. பொதுச் செயலருக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் அபிஜித் பானர்ஜி இடம்பெற்றுள்ளார்.
 "நோபல் பரிசு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே இதுபோன்ற உயரிய கெளரவம் கிடைக்கும். இதனை பணிவுடன் ஏற்கிறேன்' என்று அபிஜித் கூறியுள்ளார்.
 பொருளாதாரத் துறையில் சாதித்த பெண்: நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்தர் கூறுகையில், "இப்போது பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் என்றாலும், பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. எனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதன் மூலம் இத்துறையில் பெண்களுக்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படும் என்று நம்புகிறேன். இதன் மூலம் பெண்களின் மதிப்பு சர்வதேச அளவில் மேலும் அதிகரிக்கும். எங்கள் பணிக்கு மிகஉயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது' என்றார்.
 எஸ்தர் 1972-ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்தவர். வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர், அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பல்வேறு நிலைகளில் மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். வறுமை ஒழிப்பு, ஏழ்மையை அகற்றுவது தொடர்பாக பல ஆய்வுகளை நடத்தியுள்ளார். வறுமை ஒழிப்பு தொடர்பான இவரது புத்தகம் 17 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் சார்ந்த பல விருதுகளையும் வென்றுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
 குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து: அபிஜித்-எஸ்தர் தம்பதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் அபிஜித்-எஸ்தர் தம்பதி மற்றும் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நோபல் பரிசு வென்றுள்ள அவர்களுக்கு எனது வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.
 மம்தா பானர்ஜி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "நோபல் பரிசு வென்றதன் மூலம் நமது தேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் அபிஜித் பானர்ஜி பெருமை சேர்த்துள்ளார்' என்று கூறியுள்ளார்.
 அமர்த்தியா சென் பாராட்டு: நோபல் பரிசு வென்ற மூவருக்கும், 1998-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய நிபுணர் அமர்த்தியா சென் பாராட்டு தெரிவித்துள்ளார். "அபிஜித் உள்ளிட்ட மூவர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிகச்சரியான நபர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்' என்று கூறியுள்ளார். 86 வயதாகும் அமர்த்தியா சென் இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அமர்த்தியா சென்னும், அபிஜித் பானர்ஜியும் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரி முன்னாள் மாணவர்களாவர்.
 தாயார் மகிழ்ச்சி

 அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகியோர் நோபல் பரிசு பெற்றுள்ளது குறித்து அபிஜித்தின் தாயார் நிர்மலா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் வசித்து வரும் அவர் இது தொடர்பாக கூறுகையில், "எனது மகனும், மருமகளும் சர்வதேச அளவில் உயர்ந்த விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நமது தேசத்துக்கு பெருமையளிக்கும் விஷயம்' என்று கூறியுள்ளார்.
 நிர்மலா பானர்ஜி முன்னாள் பொருளாதாரப் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
 மைக்கேல் கிரெமரின் வளர்ச்சிக் கோட்பாடு

மைக்கேல் கிரெமர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமுக அறிவியலில் பட்டப்படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் முனைவரானார். வளர்ச்சி மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருளாதார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ள அவர், இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். 1993-இல் அவர் வெளியிட்ட "கிரெமரின் ஒ-ரிங் பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடு' மிகவும் பிரபலமானதாகும். சர்வதேச அளவில் சமுக-பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வுகளை அளித்துள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com