

டொரொன்டோ: கனடாவுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட கரோனா தடுப்பூசி புகைப்படங்களை அவர் சுட்டுரையில் பதிவிட்டு கூறியுள்ளதாவது:
தடுப்பூசி கிடைக்கப் பெற்றது மகிழ்ச்சியான செய்தி; அதே வேளையில், கரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்பதால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
குடிமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும், அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், அரசின் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஃபைஸர்} ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு கனடா சுகாதார ஒழுங்காற்று அமைப்பு அண்மையில் அனுமதி அளித்தது.
இந்தத் தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள 14 விநியோக மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுமார் 30 ஆயிரம் தடுப்பூசிகள் கனடாவுக்கு திங்கள்கிழமை வந்துசேர உள்ளன.
ஃபைஸர்-பயோஎன்டெக் நிறுவனங்களுடன் கனடா அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் இறுதிக்குள் 2 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்.
இதுதவிர 6 மருந்து நிறுவனங்களுடன் கனடா அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தற்போது, மேலும் மூன்று தடுப்பூசிகளைப் பரிசீலித்து வருவதாகவும், இதில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு சுகாதாரத் துறையினர் விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைவிட கூடுதலாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.