கரோனாவிலிருந்து உயிர் காக்கும் மருந்து டெக்ஸாமெதசோன்

​கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் டெக்ஸாமெதசோன் மருந்து உதவலாம் என பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கரோனாவிலிருந்து உயிர் காக்கும் மருந்து டெக்ஸாமெதசோன்


கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் டெக்ஸாமெதசோன் மருந்து உதவலாம் என பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக டெக்ஸாமெதசோன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இருக்கும் என பிரிட்டன் வல்லுநர்கள் கருதுவதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20-இல் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே தொற்றிலிருந்து குணமடைகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரிலும் பெரும்பாலானோர் குணமடைகின்றனர். ஆனால் சிலருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. அதிக ஆபத்தில் இருக்கும் இந்த நோயாளிகளுக்கு டெக்ஸாமெதசோன் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையில், இதுகுறித்த ஆராய்ச்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் உள்ள சுமார் 2,000 நோயாளிகளுக்கு டெக்ஸாமெதசோன் கொடுக்கப்பட்டது. இவர்கள் டெக்ஸாமெதசோன் கொடுக்கப்படாத 4,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் ஒப்பிடப்பட்டனர். வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை இது 40 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாகக் குறைக்கிறது. ஆக்ஸிஜன் தேவை உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை 25 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கிறது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பீட்டர் ஹார்பி தெரிவிக்கையில், "இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு இதுமட்டும்தான் மருந்தாக இருக்கிறது. அது குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது. இது மிகவும் முக்கியமான முன்னேற்றமாகும்" என்றார்.

பேராசிரியர் மார்டின் லாண்ட்ரே தெரிவிக்கையில், "வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வரும் 8 நோயாளிகளில் ஒருவரது உயிரை இந்த மருந்து மூலம் காப்பாற்றலாம் என்பதை ஆய்வு பரிந்துரைக்கிறது. ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில், இந்த மருந்து மூலம் சிகிச்சை பெற்று வரும் சுமார் ஒவ்வொரு 20-25 பேரில் ஒருவரது உயிரையேனும் காப்பாற்றலாம்.

டெக்ஸாமெதசோன் மூலம் 10 நாள்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். ஒரு நேயாளிக்கு 5 யூரோ டாலர் செலவாகும். எனவே, ஒரு உயிரைக் காக்க 35 யூரோ டாலர்தான் செலவாகும். இந்த மருந்து உலகளவில் கிடைக்கிறது.

எனவே, மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உகந்த நேரத்தில் எவ்வித தாமதமுமின்றி இதைக் கொடுக்க வேண்டும். மக்கள் இதை வீடுகளுக்கு வாங்கிச் சென்று பயன்படுத்தக் கூடாது." என்றார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தொடக்கத்திலிருந்தே, பிரிட்டனில் சிகிச்சையளிக்க இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5,000 உயிர்கள் வரை காப்பாற்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், சுவாசப் பிரச்னை இல்லாது லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு இந்த மருந்து உதவாது என்று கருதப்படுகிறது. இந்த மருந்து மலிவு விலையில் உலகளவில் கிடைக்கும் என்பதால், கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழை நாடுகளுக்கு பெரிதளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com