விமானிகள் கரோனா பற்றி பேசிக் கொண்டிருந்ததும் ஒரு காரணம்
விமானிகள் கரோனா பற்றி பேசிக் கொண்டிருந்ததும் ஒரு காரணம்

பாகிஸ்தான் விமான விபத்து: விமானிகள் கரோனா பற்றி பேசிக் கொண்டிருந்ததும் ஒரு காரணம்

பாகிஸ்தான் விமான விபத்துக்கு, விமானத்தை இயக்கிய விமானிகள், நிலைமையை உணராமல், அலட்சியமாக கரோனா வைரஸ் பற்றி பேசிக் கொண்டிருந்ததும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது.


புது தில்லி: பாகிஸ்தான் விமான விபத்துக்கு, விமானத்தை இயக்கிய விமானிகள், நிலைமையை உணராமல், அலட்சியமாக கரோனா வைரஸ் பற்றி பேசிக் கொண்டிருந்ததும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமானம் ஏ320  கடந்த மே மாதம் 22-ம் தேதி கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்குவதற்கு முன்பே, விமானத்தின் உயரம் மற்றும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானிகளிடம் மூன்று முறை எச்சரித்துள்ளனர்.

ஆனால், அவற்றை கண்டுகொள்ளாத விமானிகள், தனக்கு விமானத்தின் கட்டுப்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும், நிலைமையை நிச்சயம் சமாளிக்க முடியும் என்றும் விமானி அதிகப்படியான நம்பிக்கையோடு கூறியுள்ளார், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் அறிவுறுத்தல்களை மேற்கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

அதில்லாமல், விமான விபத்துக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, தரையிறங்கும் விமானத்தில் கவனம் செலுத்தாமல், விமானிகள் கரோனா பற்றி மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்ததும் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் எதுவும் இல்லை என்றும், விமானம் வானில் பறக்க முழுத் தகுதியோடு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்  பேசுகையில், விமானம் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்கள் வரை விமானிகள் இருவரும் கரோனா தொற்றுப்பரவல் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். விமானி மற்றும் உதவி விமானி இருவருமே நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் கொண்டவர்கள். கடந்த 72 ஆண்டுகளில் இதுபோன்று 12 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இதுவரை ஒரு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை, ஒருவரும் விபத்துக்கு பொறுப்பாக்கப்படவில்லை என்பதை பேரவையிலேயே அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இறுதியாக அவர்கள் தரையிறங்கும் போது கூட, விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, விமானி, நான் சமாளித்துக் கொள்வேன் என்று பதிலளித்துவிட்டு மீண்டும் கரோனா வைரஸ் பரவலைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் என்று அமைச்சர் குலாம் சர்வார் கான் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com