எங்கே இருக்கிறார் பஞ்சென் லாமா?

திபெத்திய புத்தமத வழக்கப்படி தலாய்லாமாவுக்கு அடுத்த இடத்தில் மதிப்புக்குரியவராகப் போற்றப்படுகிறார் பஞ்சென் லாமா.
11-ஆவது பஞ்சென் லாமாவின் சிறுவயது புகைப்படத்துடன் தலாய் லாமா.
11-ஆவது பஞ்சென் லாமாவின் சிறுவயது புகைப்படத்துடன் தலாய் லாமா.


தலாய் லாமாவும் பஞ்சென் லாமாவும்
திபெத்திய புத்தமத வழக்கப்படி தலாய்லாமாவுக்கு அடுத்த இடத்தில் மதிப்புக்குரியவராகப் போற்றப்படுகிறார் பஞ்சென் லாமா. பஞ்சென் லாமா என்றால் சிறந்த கல்வியாளர் என அர்த்தம். இந்த வார்த்தை சம்ஸ்கிருத மற்றும் திபெத்திய மொழிகளில் இருந்து உருவானது. பண்டித எனும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு கல்வியாளர் என அர்த்தம். சென்போ எனும் திபெத்திய வார்த்தைக்கு சிறந்த என அர்த்தம். பண்டித எனும் வார்த்தையின் பண், சென்போ எனும் வார்த்தையின் சென் இரண்டும் இணைந்து பண்+சென்-பஞ்சென் என உருவாகியது.

பஞ்சென் லாமா நியமனமானது 1385-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. முதல் பஞ்சென் லாமாவாக கெட்ரூப் கெலக் பால் சாங்போ (1385-1438) செயல்பட்டார். இருப்பினும், 5-ஆவது தலாய் லாமாவால் லோப்சங் சோகி கலாய்ட்ஸன் என்பவர் 4-ஆவது பஞ்சென் லாமாவாக 1645-இல் நியமிக்கப்பட்டார். அதிலிருந்துதான் பஞ்சென் லாமா நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

முதல் தலாய் லாமாவால் கட்டப்பட்ட தாஷில்ஹூன்போ மடாலயம் திபெத்தின் ஷிகாட்ஷே நகரில் உள்ளது. பஞ்சென் லாமாக்கள் வழிவழியாக இங்கு தலைமை குருவாக செயல்பட்டு வருகின்றனர்.

தலாய் லாமாவுக்கும் பஞ்சென் லாமாவுக்கும் இடையேயான உறவு உணர்வுபூர்வமானது. பஞ்சென் லாமாவின் மறுபிறவியை அடையாளம் கண்டறிந்து சிறுவயதிலேயே அவரை தலாய் லாமா நியமிப்பார். அதேபோல், தலாய் லாமாவின் மறுபிறவியைக் கண்டறிந்து அடுத்த தலாய் லாமாவாக நியமிப்பதில் பஞ்சென் லாமாவின் பங்கு முக்கியமாக இருக்கும்.

அந்த வகையில் பத்தாவது பஞ்சென் லாமாவாக பணியாற்றியவர் லோப்சாங் சோகி கயால்ட்ஸன். திபெத்திய கலாசாரத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். திபெத்தை சீனா ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, 1959-இல் ஏராளமான திபெத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தனது 21-ஆவது வயதில் அவர் தொடர்ந்து திபெத்திலேயே தங்கினார். அவரை திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தின் தலைவராக சீனா நியமித்தது. ஆனாலும் அந்தப் பதவியைப் பயன்படுத்தி திபெத்தியர்களின் நலனுக்காகவே தீவிரமாக செயல்பட்டார். பின்னர், அவர் சீனாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 14 வருடம் வீட்டுச் சிறையில் வைத்தது சீன அரசு. அதன்பிறகு விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் தனது பணியை விடவில்லை. இந்நிலையில், 1989-இல் தனது 51-ஆவது வயதில் மர்மமான முறையில் உயிரிழந்தார். "திபெத்தியராக இரு; திபெத்தியர்களுக்காக இரு' என்கிற கொள்கை முழக்கத்தை உருவாக்கியவர் அவரே. அதன்பிறகு 11-ஆவது பஞ்சென் லாமா நியமனத்தில்தான் தலாய் லாமாவுக்கும், திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com