
பாகிஸ்தானில் தனிமையோடு போராடிய காவன் யானைக்கு நாளை விடுதலை
தனக்குள் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும், பாகிஸ்தான் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை தன்னால் இயன்றவரை மகிழ்ச்சிப்படுத்தி வந்த உலகின் மிகத் தனிமையான யானைக்கு நாளை விடுதலை கிடைக்கப் போகிறது.
காவன்.. ஆம் அந்த யானையின் பெயர். இலங்கையில் ஒரு வயதிருக்கும்போது, அனாதையாகக் கிடைத்த இந்த காவன் யானை, அந்நாட்டு அரசால், பாகிஸ்தான் அரசுக்கு 1985-ஆம் ஆண்டு பரிசாக அளிக்கப்பட்டது. அது முதல், காவன், பாகிஸ்தான் உயிரியல் பூங்காவில் சொல்லொணாத் துயரங்களுடன் சிறைவைக்கப்பட்டுள்ளது.
அந்த உயிரியல் பூங்காவின் நிர்வாகம் அதிலிருக்கும் விலங்குகளை உரிய முறையில் பராமரிக்கத் தவறியதால், அதில் பணியாற்றிய ஊழியர்கள், தங்களது பாக்கெட்டை நிரப்ப விலங்குகளை மிக மோசமாக நடத்தினர். வருகையாளர்களைப் பார்த்து கையசைக்க, வணக்கம் சொல்ல கட்டாயப்படுத்தப்பட்ட காவன், மீறினால், அதன் நகக்கண்களில் ஊசியால் குத்தி துன்புறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் கால் விலங்கோடு தனிமையைக் கழித்த காவனை மீட்க பல சமூக ஆர்வலர்கள் ஆண்டுக்கணக்கில் போராடினர்.
பொதுவாகவே யானைகள் மனிதர்களைப் போலவே கூட்டமாக வாழும். யானைகளுக்கும் மனிதர்களைப் போலவே அன்பு, காதல், மரணத்தால் ஏற்படும் வலி என அனைத்தும் உண்டு. அனைத்துமே காவனுக்கும் உண்டு. தனிமையில் இருந்ததால் அது அதிகமாகவே உணரப்பட்டிருக்கலாம்.
My Big boy,in the night,in the light,With his Best Friend
— Cher (@cher) November 8, 2020
Dr Amir pic.twitter.com/cvCOFHkogU
Kaavan's journey to freedom from captivity in Islamabad to Cambodia will be a 2021 @SmithsonianChan documentary Help us build Kaavan's forever home https://t.co/dzdl4Ew4gn @ftwglobal #KaavansJourney pic.twitter.com/iTxdzfndNB
— Cher (@cher) November 27, 2020
தனிமை மற்றும் உயிரியல் பூங்காவில் யானையைப் பராமரித்தவரின் துன்புறுத்தல், அங்கு நிலவிய கடும் வெப்பம் என அனைத்துமே காவனுக்கு எதிரிகளாகவே அமைந்துவிட்டன.
காவனின் தனிமையைப் போக்க சஹேலி என்ற பெண் யானை இந்த உயிரியல் பூங்காவுக்கு வரவழைக்கப்பட்டது. அது காவனுடன் 1999 - 2012 வரை இணையாக இருந்தது. ஆனால், திடீரென ஒரு நாள் இறந்து போனது. காரணம், நெஞ்சுவலி என்றார்கள். ஆனால், பராமரிப்பாளர், அதன் கால் நகக்கண்களில் குத்தும்போது ஏற்பட்ட காயங்களில் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாகவே சஹேலி பலியானது நிரூபிக்கப்படாமலேயே போனது.
அதுமுதல் காவன் மீண்டும் தனிமைச் சிறைக்குத் தள்ளப்பட்டது. தன்னைத் தானே சுவரில் மோதி தனது தனிமையின் வலியை தனித்துக் கொள்ளும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி, காவன் மீதான கவனத்தை ஈர்த்தது.
இதன் பயனாக, பல்வேறு சமூக ஆர்வலர்களின் முன் முயற்சியுடன், பாடகி செர் எடுத்த நடவடிக்கையின் பயனாக, காவன், தனது தனிமைச் சிறையில் இருந்து கம்போடியாவுக்குப் பறக்க உள்ளது.
இதற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விமானம் தயாராக உள்ளது. பாகிஸ்தானில் இருந்து காவன் நாளை (நவ.29) ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவுக்குப் பறக்க உள்ளது. சுமார் 10 மணி நேரப் பயணத்தில், காவனுடன் கால்நடை மருத்துவர்களும் உடன் செல்கிறார்கள். பிறகு அங்குள்ள உயிரியல் பூங்காவில் காவன் சேர்ப்பிக்கப்படுகிறது. அங்கு ஏற்கெனவே 3 பெண் யானைகள் இருப்பதால், நிச்சயம் காவனுக்கு அங்கு ஒரு நல்ல சூழ்நிலை அமையும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
புகைப்படம்: நன்றி பாகிஸ்தான் வனக்காவலர்
@ForestGuard4 சுட்டுரைப் பக்கம்