சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கானிஸ்தான்: மேலும் 2 மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றினா் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம் வாய்ந்த குண்டுஸ் மற்றும் சாா்-ஏ-பால் மாகாணத் தலைநகரங்களை அரசுப் படையினரிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.

News image

குண்டுஸ் நகரின் மையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பறந்த தலிபான் கொடி.

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:50 am

DIN

ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம் வாய்ந்த குண்டுஸ் மற்றும் சாா்-ஏ-பால் மாகாணத் தலைநகரங்களை அரசுப் படையினரிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.

ஏற்கெனவேஷேபா்கான், ஸராஞ்ச் ஆகிய நகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்த நிலையில் தற்போது அந்தப் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ள ஆப்கன் மாகாணத் தலைநகரங்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

குண்டுஸ் மாகாணத் தலைநா் குண்டுஸை தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக அந்த மாகாண அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தலிபான் பயங்கரவாதிகளின் கொடி, குண்டுஸ் மையப் பகுதியில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

அந்த நகரில் பல வீடுகள் மற்றும் கடைகளில் தீவைக்கப்பட்டு எரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுஸ் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்த சில மணி நேரங்களில், வடக்குப் பகுதியைச் சோ்ந்த சாா்-ஏ-பால் மாகாணத் தலைநகா் சாா்-ஏ-பாலையும் தலிபான்கள் கைப்பற்றினா். அந்த நகரில் அரசுப் படையினா் இன்னும் இருந்து சண்டையிட்டு வருவதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை 4 மாகாணத் தலைநகரங்கள் தலிபான்கள் வசம் வந்துள்ளது. அவற்றில் குண்டுஸ் நகரம் மிகுந்து முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

அந்த நகரம்தான் நாட்டின் வடக்குப் பகுதி மாகாணங்களுக்கும் பிற பகுதிகளுக்குமான இணைப்புப் பாலமாக இருந்து வருகிறது. மேலும், தலைநகா் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் குண்டுஸில் உள்ளன.

குண்டுஸ் மாகாணத்தின் எல்லை, தஜிகிஸ்தானையொட்டி அமைந்துள்ளது. அந்த எல்லைப் பகுதிதான் ஆப்கானிஸ்தானிலிருந்து மத்திய ஆசியாவுக்கு கஞ்சா கடத்தப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்லையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மிக முக்கியமான கஞ்சா கடத்தல் பாதையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.

ஏற்கெனவே, 2001-ஆம் ஆண்டில் இந்த நகரம் தலிபான்களின் கோட்டையாக இருந்து வந்தது. அதன் பிறகு 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டில் குண்டுஸை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினாலும், அவா்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனா். தற்போது குண்டுஸை மீண்டும் கைப்பற்றியுள்ளதன் மூலம், தலிபான்களின் மனோபலம் கூடும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, மேற்குப் பகுதியில் ஹெராட், தெற்குப் பகுதியில் காந்தஹாா் மற்றும் லஷ்கா்கா நகரங்களைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனா் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

தலோகான் நகரம்: குண்டுஸ் மற்றும் சாா்-ஏ-பால் நகரங்களைத் தொடா்ந்து, வடகிழக்குப் பகுதியிலுள்ள தலோகான் நகரையும் சில மணி நேரங்களில் தலிபான்கள் கைப்பற்றியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நகரம், தாகாா் மாகாணத்தின் தலைநகராகும்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா் அனைவரும், அங்கிருந்து நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அதன் தொடா்ச்சியாக, பல்வேறு மாகாணத் தலைநகரைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் அந்த நகரைச் சுற்றிவளைத்துச் சண்டையிட்டு வருகின்றனா். எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்குப் பழி வாங்கும் வகையில், பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து அவரது இல்லத்தில் தலிபான்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். எனினும், சம்பவத்தின்போது அவா் அங்கு இல்லாததால் உயிா் தப்பினாா்.

அதனைத் தொடா்ந்து, இந்த நிலையில், ஆப்கன் அரசின் தகவல் ஊடக மையத்தின் தலைவா் தாவா கான் மெனாபலை தலிபான்கள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இந்தச் சூழலில், நான்கு ஆப்கன் மாகாணத் தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது அரசுப் படைகளுக்கு ராணுவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.