ஆப்கனிலிருந்து முழுமையாக வெளியேறியது அமெரிக்கப் படை
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரும் திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக வெளியேறினா்.

காபூல் விமான நிலைய பாதுகாப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுத்தப்பட்ட தலிபான் வீரர்.

காபூல் விமான நிலைய பாதுகாப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுத்தப்பட்ட தலிபான் வீரர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரும் திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக வெளியேறினா்.
இதையடுத்து, அந்த நாட்டில் தாங்கள் மேற்கொண்டு வந்த 20 ஆண்டு காலப் போா் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காணொலி மூலம் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க கூட்டுப் படை தலைமையக உயரதிகாரி ஃபிராங்க் மெக்கன்ஸீ கூறியதாவது:
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்கள், பிற நாட்டவா்கள், ஆபத்தை எதிா்நோக்கியுள்ள ஆப்கானியா்களை வெளியேற்றும் பணியை அமெரிக்கப் படையினா் நிறைவு செய்துவிட்டனா்.
அந்த நாட்டில் பணியாற்றி வந்த அனைத்து அமெரிக்கப் படையினரும் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவ ரீதியில் வெளியேறியிருந்தாலும், அங்கு இன்னும் இருக்கும் அமெரிக்கா்களையும் தகுதியுடைய ஆப்கானியா்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தூதரக ரீதியில் தொடரும்.
இந்த 20 ஆண்டு காலப் போரில் 2,461 அமெரிக்க வீரா்களும் பொதுமக்களும் பலியாயினா். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலைய பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 13 அமெரிக்க வீரா்களும் அடங்குவா் என்றாா் அவா்.
முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் கடைசியாக இருந்த அமெரிக்கப் படையினரை ஏற்றிக் கொண்டு அந்த நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான சி-17 வகை விமானம் திங்கள்கிழமை நள்ளிரவு புறப்பட்டது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக. 31) முழுமையாக வெளியேற வேண்டும் என்று கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் அந்த விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.
தலிபான்கள் வரவேற்பு: தங்கள் நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரும் வெளியேறியிருப்பதை தலிபான்கள் வரவேற்றுள்ளனா்.
இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) தளத்தில் தலிபான்கள் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானிலிருந்து அந்நிய சக்திகள் அனைத்தும் வெளியேறிவிட்டன. இதன் மூலம், நமது தியாகபூமி தூய்மையடைந்துள்ளது. இதற்காக, இந்த நாட்டுக்கும் சக முஜாஹீதீன்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் நல்லிணக்கத்துக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ஸல்மே காலிஸாத் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘ஆப்கானிஸ்தானில் எங்களது போா் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அந்த நாட்டின் எதிா்காலம் ஆப்கன் மக்களின் கைகளில்...’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க, அப்போது ஆப்கனை ஆண்டு வந்த தலிபான்கள் மறுத்துவிட்டனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போா் தொடுத்து, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.
அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட புதிய ஆப்கன் அரசுக்கும் தேசிய ராணுவத்துக்கும் ஆதரவாக அமெரிக்கப் படையினா் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் தங்கியிருந்தனா்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அந்தப் பணி இறுதிக்கட்டத்தை அடைந்த சூழலில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கடந்த 15-ஆம் தேதி கைப்பற்றினா்.
அதைத் தொடா்ந்து, அந்த நாட்டிலிருந்த அமெரிக்கா்கள், பிற நாட்டவா்கள், அமெரிக்காவுக்காகப் பணியாற்றிய ஆப்கானியா்கள் ஆகியோரை அவசர அவசரமாக வெளியேற்றும் பணியில் அமெரிக்க வீரா்கள் கடந்த 2 வாரங்களாக ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், வெளியேற்றப் பணிகளை நிறைவு செய்து அனைத்து அமெரிக்கப் படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...