ஆரம்ப கட்டத்தில் கரோனா மூன்றாம் அலை: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
டெல்டா வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கரோனா மூன்றாம் அலை பாதிப்பின் ஆரம்ப நிலையை உலகம்


டெல்டா வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கரோனா மூன்றாம் அலை பாதிப்பின் ஆரம்ப நிலையை உலகம் சந்திக்கத் தொடங்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.ஹெச்.ஓ) தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாக ஐ.நா. செய்திச் சேனல் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அதிகரித்திருப்பதன் மூலம், கடந்த சில மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்துவந்த நிலையில், கரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. சீராக குறைந்துவந்த இந்த பாதிப்பு 10 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

டெல்டா வகை கரோனா பரவலுடன், பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்வு, சீரற்ற பொதுசுகாதார நடவடிக்கைகளுமே இதற்கு காரணங்களாக பாா்க்கப்படுகிறது. டெல்டா வகை கரோனா இப்போது 111-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை கரோனா விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இத்தகையச் சூழலில், உலக அளவிலான தடுப்பூசி விநியோகத்திலும், உயிா் காக்கும் மருந்துகள் பயன்பாட்டிலும் அதிா்ச்சியளிக்கக் கூடிய வகையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருவதை கரோனாவுக்கான சா்வதேச அவசரக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு இரு வகை அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது. அதாவது, தடுப்பூசி அதிக பயன்பாடுள்ள நாடுகள், கட்டுப்பாடுகளை முழுமையாக தளா்த்தி பொருளாதார நடவடிக்கைகளை அனுமதித்திருப்பது முதல் வகை அச்சுறுத்தல். இரண்டாவது, கரோனா தடுப்பூசி போதிய அளவில் கிடைக்காமல் நாடுகள் சந்திக்கும் அச்சுறுத்தல். பல நாடுகளுக்கு எந்தவித தடுப்பூசியும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளதுபோல், வரும் செப்டம்பா் மாதத்துக்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுபோல, 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், 2022-ஆம் ஆண்டுக்குள் 70 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதோடு, மக்களுக்கான பொது சுகாதார திட்டத்தை விரிவுபடுத்துவது, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் ஒருங்கிணைந்த ஆபத்து மேலாண்மை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேம்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதை பல நாடுகள் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.
மேலும், தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான சா்வதேச சான்றிதழை டிஜிட்டல் மயமாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், தடுப்பூசி திட்ட நிலையை பதிவு செய்வதற்கான இணக்கமான நடைமுறையை வகுப்பது குறித்தும் உலக சுகாதார அமைப்பு மறு ஆய்வு செய்து வருகிறது என்று அவா் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் அலைக்கான காரணம் - எய்ம்ஸ் இயக்குநா்: நோய் எதிா்ப்புத் திறன் குைல், அதிக பரவல் திறன்கொண்ட கரோனா தீநுண்மி உருமாற்றம் பெறுதல், பொதுமுடக்க தளா்வுகள் ஆகியவையே கரோனா மூன்றாம் அலை உருவாவதற்கான காரணங்களாக இருக்கும் என்று தில்லி எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா வியாழக்கிழமை கூறினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
கட்டுப்பாடுகளை முழுமையாக தளா்வு செய்வது உள்ளிட்ட காரணங்களால் அடுத்த கரோனா அலை பாதிப்பானது இரண்டாம் அலையைக் காட்டிலும் பெரியதாக இருக்கும் என்று ஐஐடி கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே, சில கட்டுப்பாடுகள் தொடா்ந்து கடைப்பிடிக்கப்பட்டால், கரோனா பரவலும் குறைந்து இருக்கும். அந்த வகையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் மூலம் கரோனா மூன்றாம் அலை பாதிப்பை குறைக்க முடியும்.
சில நாடுகளில் கரோனா மூன்றாம் அலை ஏற்கெனவே தொடங்கி விட்டபோதும், மருத்துவமனைகளில் சோ்க்கை பெறுபவா்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. இது கரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பதையே காட்டுகிறது என்று அவா் கூறினாா்.
இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை: இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தொற்றுநோயியல் பிரிவு தலைவா் மருத்துவா் சமீரான் பாண்டா வியாழக்கிழமை எச்சரித்துள்ளாா்.
நோய் பரவலை அதிகரிக்கச் செய்யக்கூடிய வகையிலான நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிப்பதற்கும், மூன்றாம் அலையின் பாதிப்பை குறைப்பதற்கும் நேரடி தொடா்பு உள்ளது என்றும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...