கசியவிடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் குறுஞ்செய்தி; ஆஸ்திரேலியாவின் பதில் என்ன?

பிரான்ஸ் அதிபர் தனிப்பட்ட அளவில் அனுப்பிய குறுஞ்செய்தி கசிந்திருப்பது வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிராத அவமதிப்பு என ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே உள்ள உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியா நாட்டின் தலைவருக்கு பிரான்ஸ் அதிபர் தனிப்பட்ட அளவில் அனுப்பிய குறுஞ்செய்தி கசிந்திருப்பது வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிராத அவமதிப்பு என ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜேன் பியர் திபால்ட் தெரிவித்துள்ளார்.

புதிய நீர்மூழ்கிக் கப்பலை தயார் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட பத்தாண்டு ஒப்பந்தம் திரும்ப பெறப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது. இதற்கு இரண்டு முன்புக்கு, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட அளவில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இந்த குறுஞ்செய்திதான் தற்போது கசந்துள்ளது.

இதற்கு பிரான்ஸ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, மோரிசன் பொய் சொல்வதாக மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஆஸ்திரேலியாவும் எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜேன் பியர் திபால்ட் கூறுகையில், "குறுஞ்செய்தி கசிந்திருப்பது வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிராத அவமதிப்பு.

கூட்டாளிகளாக இருக்கும் தலைவர்களின் தனிப்பட்ட பரிமாற்றங்களில் நீங்கள் இப்படி நடந்து கொள்ளாதீர்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் கூட்டாளியாக பார்க்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படலாம். இவ்வாறு செய்திருப்பது அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் மிகவும் கவலையளிக்கும் சமிக்ஞை. 

அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். ரகசிய தகவல்களை ஆஸ்திரேலியா கசியவிடுகிறது. கூட்டாளர்களிடம் நம்பிக்கையுடன் நீங்கள் சொல்லும் தகவல் ஒரு நாள் உங்களுக்கு எதிராகவே ஆயுதமாக்கப்படும்" என்றார்.

"நம்முடைய கூட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் நல்ல செய்தியை நான் எதிர்பார்க்கலாமா?" என மோரிசனுக்கு மேக்ரான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மோரிசன் பொய் சொல்வதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கில் குறுஞ்செய்தி தகவல் கசியவிடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுடனான புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கிய ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டின் டீசல் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திலிருந்து செப்டம்பர் மாதம் வெளியேறியது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு பதிலடி தரும் விதமாக, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ஆக்கஸ் என்ற கூட்டணியை அமைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com