உலகம் முழுவதும் எதிரொலிக்கும் எரிபொருள் பிரச்னை; இந்தியாவிடம் கடன் கேட்டுள்ள அண்டை நாடு

மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக கேட்கப்பட்டுள்ள கடன் குறித்து இருநாட்டு மின்சாரத்துறை செயலாளர்களும் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்னை தலைவரித்தாடும் நிலையில், கச்சா எண்ணெயை வாங்குவதற்காக இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நாடு கடனாக கேட்டுள்ளது.

தற்போது, இருப்பில் உள்ள எரிபொருள் அடுத்த ஜனவரி மாதம் வரைதான் தாக்கு பிடிக்கும் என இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் உதாயா கம்மன்பெல எச்சரித்திருந்த நிலையில், இந்தியாவிடம் இலங்கை கடன் கேட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உள்ளது. பொதுத்துறை வங்கிகளான சிலோன் வங்கி, மக்கள் வங்கி ஆகியவையிடம் அந்த கடனை திருப்பி தரவேண்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயையும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களையும் இலங்கை இறக்குமதி செய்கிறது.

இதுகுறித்து சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில், "இந்திய - இலங்கை பொருளாதார கூட்டு ஏற்பாட்டின்படி இந்திய தூதரகத்திடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கோரியுள்ளோம். இந்த பணத்தை வைத்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க பயன்படுத்துவோம். 

மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக கேட்கப்பட்டுள்ள கடன் குறித்து இருநாட்டு மின்சாரத்துறை செயலாளர்களும் ஒப்பந்தம் மேற்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதித்துறைச் செயலாளர் ஆத்திகல்லே கூறியுள்ளார். சமையல் எரிவாயு மற்றும் இதர அத்தியாவசிய பொருள்களின் விலை கடந்த வாரம் அதிகரித்த போதிலும், எரிபொருளின் சில்லறை விலை உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் இந்த ஆண்டு எண்ணெய் இறக்குமதிக்கு அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் எண்ணெய் கட்டணம் 41.5 சதவீதம் உயர்ந்து 2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

கடந்த வாரம், இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பேசிய பசில் ராஜபட்ச, "கரோனா பெருந்தொற்று தாக்கியதை தொடர்ந்து, சுற்றுலா மூலம் கிடைக்கும் நிதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. தற்போது, இலங்கை பெரும் அந்நிய செலாவணி பிரச்னையில் சிக்கியுள்ளது" என்றார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2020 ஆம் ஆண்டில் 3.6 சதவிகிதம் சரிந்து அதன் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை மாதத்தில் பாதியாக குறைந்து வெறும் 2.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஒரு ஆண்டில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் 9 சதவிகித வீழ்ச்சியை ஏற்படுத்தி, இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை உயர்த்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com