பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சிக்கும் குவாட் கூட்டமைப்பு; கூட்டறிக்கை சொல்லும் செய்தி என்ன?

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள ராணுவ மற்றும் நிதி உதவி அளிக்கக் கூடாது என குவாட் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குவாட் கூட்டமைப்பின் முதல் நேரடி உச்சி மாநாடு அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். 

அதில், "தூதரக, பொருளாதார, ஆப்கானிஸ்தான் தொடர்பான மனித உரிமை விவகாரங்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், தெற்காசியாவில் மனிதாபிமான ரீதியான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் குவாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த குவாட் கூட்டமைப்பு, "தெற்காசியாவில் பயங்கரவாதிகளை பினாமிகள் போல் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவ, நிதி உதவி அளிக்கக் கூடாது. ஏனெனில், இது எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள பயன்படும். 

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவோ அடைக்கலம் அளிக்கவோ மற்ற நாடுகளை அச்சுறுத்தவே ஆப்கானிஸ்தான் பயன்பட்டுவிடக் கூடாது. ஆப்கன் மக்களுக்கு துணையாக ஒன்றிணைந்து நிற்கிறோம். அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்கு தலிபான்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் என அனைத்து மக்களின் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com