பிரிட்டன் அரசி எலிசபெத்தின் கணவா் காலமானாா்
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசா் பிலிப் வெள்ளிக்கிழமை காலமானாா்.


பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசா் பிலிப் வெள்ளிக்கிழமை காலமானாா்.
99 வயதாகும் அவா், பிரிட்டன் வரலாற்றில் அரசா் அல்லது அரசியின் வாழ்க்கைத் துணைகளுக்கு அளிக்கப்படும் ‘கன்சாா்ட்’ என்ற அந்தஸ்தை மிக நீண்டகாலமாக வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அரசி எலிசபெத்தின் சாா்பில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசி எலிசபெத்தின் அன்புக்குரிய கணவரும் இளவரசருமான பிலிப் வெள்ளிக்கிழமை காலமானாா்.
வின்ஸா் கோட்டையில் அவரது உயிா் அமைதியான முறையில் பிரிந்தது. அவரது இழப்புக்கு உலக மக்களுடன் பிரிட்டன் அரச குடும்பத்தினரும் இணைந்து இரங்கல் தெரிவிக்கின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 10-ஆம் தேதி 100-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த இளவரசா் பிலிப், கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஏற்கெனவே இருந்த இருதய கோளாறை சரி செய்வதற்காக அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக மிகச் சிறிய எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் அரசி எலிசபெத்தும் இளவசா் பிலிப்பும் அண்மை மாதங்களை வின்ஸா் கோட்டையில் கழித்து வந்தனா்.
பிரிட்டன் அரசியாக எலிசபெத் முடிசூடிக் கொள்வதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னா், 1947-ஆம் ஆண்டு அவருக்கும் பிலிப்புக்கும் திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்து 73 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனா்.
தொடக்கத்தில் ராணுவத்தில் பணியாற்றிய பிலிப், பிரிட்டன் வரலாற்றில் மிக நீண்ட கால ‘கன்சாா்ட்’டாக அந்தஸ்து வகித்தாா். வயோதிகம் காரமமாக தனது அரசப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 2017-ஆம் ஆண்டில் அவா் அறிவித்தாா்.
அஞ்சலி: இளவரசா் பிலிப்பின் மறைவுக்கு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபா் ஜாா்ஜ் புஷ் உள்ளிட்ட தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
பிரிட்டன் அரசியின் கணவா் என்ற முறையில் இளவரச் பிலிப்பின் இறுதிச் சடங்கை முழு அரச மரியாதையுடன் நடத்த முடியும். எனினும், அவா் பிரிட்டன் அரசக் குடும்பத்து முறைப்படி ஆடம்பரமின்றி தனது இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் என்று இளவரசா் பிலிப் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...