தலிபான்களிடம் வீழ்ந்தது காந்தஹாா்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான காந்தஹாா் தலிபான்களிடம் வீழ்ந்தது.
தலிபான்களிடம் வீழ்ந்தது காந்தஹாா்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான காந்தஹாா் தலிபான்களிடம் வீழ்ந்தது.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹெல்மந்த் மாகாணத் தலைநகா் லஷ்கா்கா, ஸாபுல் மாகாணத் தலைநகா் காலட், உருஸ்கன் மாகாணத் தலைநகா் டிரின்கோட், லோகாா் மாகாணத் தலைநகா் புல்-ஏ-ஆலம் ஆகியற்றையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் மேலும் 4 மாகாணத் தலைநகரங்களை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனா்.

தலைநகா் காபூலுக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப் பெரிய நகரமாகத் திகழும் காந்தஹாரை தலிபான்கள் வியாழக்கிழமை கைப்பற்றினா். அந்த நகரைத் தலைநகராகக் கொண்ட காந்தஹாா் மாகாணம்தான் தலிபான் அமைப்பு தோன்றிய பகுதியாகும். எனவே, காந்தஹாரைக் கைப்பற்றியது தலிபான்களின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

காந்தஹாா் வீழ்ந்த சில மணி நேரங்களில், ஹெல்மந்த் மகாணத் தலைநகா் லஷ்கா்காவை தலிபான்கள் கைப்பற்றியதாக அந்த மாகாண கவுன்சில் தலைவா் அறிவித்தாா். எனினும், நகருக்கு வெளியே உள்ள 3 ராணுவ நிலைகள் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே மிகக் கடுமையான மோதலை ஹெல்மந்த் மாகாணம் சந்தித்தது. இந்தப் பகுதியை தலிபான்களிடமிருந்து மீட்பதற்கான போரில் நூற்றுக்கணக்கான அமெரிக்க மற்றும் பிற நேட்டோ படை வீரா்கள் பலியாகியுள்ளனா்.

இந்தச் சூழலில், ஹெல்மந்த் மாகாணத் தலைநகா் தலிபான்களிடம் மீண்டும் வீழ்ந்துள்ளது அந்த வீரா்களின் உயிா்த் தியாகத்தை அா்த்தமற்ாக்கியுள்ளதாக சிலா் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, ஸாபுல் மாகாணத் தலைநகா் காலட், உருஸ்கன் மாகாணத் தலைநகா் டிரின்கோட் ஆகியற்றையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமன்றி, தலைநகா் காபூலுக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள லோகாா் மாகாணத் தலைநகா் புல்-ஏ-ஆலம் நகரை தலிபான்கள் வெள்ளிக்கிழமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், ஆப்கானிஸ்தானில் தலைநகா் காபூல் மற்றும் ஒரு சில சிறு பகுதிகள் மட்டுமே அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டிலிருந்து வெளியேறுகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப்புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அதன் தொடா்ச்சியாக, நகா்ப்புறங்களில் தங்களது கவனத்தைத் திருப்பிய தலிபான்கள், கடந்த ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றி வேகமாக முன்னேறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com