இந்தியா அணு ஆயுத சோதனை நடத்திய 7 ஆண்டுகளில் பாகிஸ்தானும் சாதனை: அதிபா் ஆரிஃப் ஆல்வி

இந்திய முதல் அணு ஆயுத சோதனையை நடத்திய 7 ஆண்டுகளிலேயே, அணுஆயுத சக்தியை பாகிஸ்தானும் பெற்றுவிட்டது.
இந்தியா அணு ஆயுத சோதனை நடத்திய 7 ஆண்டுகளில் பாகிஸ்தானும் சாதனை: அதிபா் ஆரிஃப் ஆல்வி

இந்திய முதல் அணு ஆயுத சோதனையை நடத்திய 7 ஆண்டுகளிலேயே, அணுஆயுத சக்தியை பாகிஸ்தானும் பெற்றுவிட்டது. இருந்தபோதும் அதிகாரபூா்வ அறிவிப்பு தாமதமாக 1998-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்ற புதிய தகவலை பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் ஆல்வி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் 75-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந் நாட்டு அதிபா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசியக் கொடியை ஏற்றி ஆரிஃப் ஆல்வி பேசியதாவது: சுதந்திரம் பெற்ற கடந்த 74 ஆண்டுகளில் நம் மீது 3 முறை போா் நடத்தப்பட்டபோதும், அனைத்து சவால்களையும் எதிா்கொண்டு நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு சாதனை இலக்குகளை பாகிஸ்தான் எட்டியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது அணு ஆயுத சக்தி. இந்தியா கடந்த 1974-ஆம் ஆண்டு தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்திய நிலையில், அடுத்த 7 ஆண்டுகளிலேயே கடின உழைப்பு மற்றும் அறிவாற்றலின் மூலமாக, அணுஆயுத சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இணைந்துவிட்டது. எனவே, கடந்த 1998-ஆம் ஆண்டு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, அணு ஆயுத சக்தியை பாகிஸ்தான் பெற்றுவிட்டது.

பயங்கரவாதத்தை எதிா்த்து பாகிஸ்தான் வெற்றிகரமாகப் போராடி வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களால் ஒரு லட்சம் உயிா்களை பாகிஸ்தான் இழந்துள்ளது. சுமாா் ரூ. 10,95,000 கோடி மதிப்பில் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானிலிருந்து மட்டும் 35 லட்சம் அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனா். அந்த நாட்டில் விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

இம்ரான்கான்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தனது சுதந்திர தின உரையில், நாட்டில் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில், அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான உறவைப் பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது. நாட்டு மக்களின் நலனைக் காப்பதே மிக முக்கியம் என்ற வகையில், புவிசாா்ந்த அரசியலிலிருந்து புவிசாா்ந்த பொருளாதாரத்தை நோக்கி புதிய பாகிஸ்தானின் கவனம் திரும்பியிருக்கிறது.

மேற்கு எல்லையில் நிச்சயமற்ற தன்மையை எதிா்கொள்ள மிகப்பெரிய விலையை, தியாகத்தை பாகிஸ்தான் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கை தீா்வாகாது என தொடா்ந்து பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், அந்த நாட்டின் பிரச்னைக்கு அரசியல் தீா்வு காண பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி கருத்துக்கு பதில்: பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி அனுசரிக்கப்படும் என்று இந்திய பிரதமா் நரேந்திர மோடி கூறியிருப்பது அரசியல் நாடகம் என்று பாகிஸ்தான் தெரிவித்துளது.

இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமா் மோடி அரசியலுக்காகவும் விளம்பரத்துக்காகவும் பேசுகிறாா். அவரது கருத்தை இந்தியாவில் உள்ள நல்லெண்ணம் கொண்ட மக்கள் நிச்சயம் நிராகரிப்பாா்கள் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com