ஆப்கன்: ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்

தலைநகர் காபூலுக்குள் புதியவர்கள் கம்பீரமாகக் கால் வைப்பதும்,  பழையவர்கள் ‘சரோஜா! சாமான் நிக்காலோ’ என்று கடையைக் கட்டுவதும் ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை அவ்வப்போது நடக்கிற ஒன்று.
ஆப்கன்: ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்

பழையன கழிதலும் புதியன புகுதலும், ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நடக்கிற சம்பவங்கள்தான்.

தலைநகர் காபூலுக்குள் புதியவர்கள் கம்பீரமாகக் கால் வைப்பதும்,  பழையவர்கள் ‘சரோஜா! சாமான் நிக்காலோ’ என்று கடையைக் கட்டுவதும் ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை அவ்வப்போது நடக்கிற ஒன்று.

ஆப்கானிஸ்தானில் பாப்ராக் கார்மல் தலைமையிலான பொதுவுடைமை  அரசைக் காப்பாற்ற, 1979, டிசம்பர் 27ஆம் தேதியன்று அமுதார்யா ஆற்றைக் கடந்து அட்டகாசமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த ரஷியப் படை, 1989ல் அப்போதைய ரஷிய ஆதரவு ஆப்கன் அதிபர் முகமது நஜிபுல்லாவைக் கைவிட்டுவிட்டு சோகம் கப்பிய முகத்துடன் அதே அமுதார்யா ஆற்றைக் கடந்து ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியது.

1992ல் அமெரிக்க ஆதரவு முஜாஹிதின் படைகள் இதேபோன்ற ஒரு  ஆரவாரத்துடன்தான் தலைநகர் காபூலுக்குள் புகுந்தன.

அப்போது சிப்கதுல்லா மொடெடி என்பவர்தான் தற்காலிக அதிபராக இருந்தார்.

இருந்தும் வெற்றிப் பெருமிதத்துடன் தலைநகர் காபூலுக்குள் புகுந்த முஜாஹிதின்கள் நஜிபுல்லாவைக் கைது செய்தனர்.

1008 கசையடிகள், வாகனத்தின் பின்புறம் கட்டிவைத்துத் தெருத்தெருவாக இழுப்பு, ஆணுறுப்பு துண்டிப்பு போன்ற தண்டனைகளுக்குப் பிறகு, விளக்குக் கம்பம் ஒன்றில் நஜிபுல்லாவின் உயிரற்ற உடல் 2 நாள்களுக்குத் தொங்க விடப்பட்டிருந்தது. 

முகமது நஜிபுல்லா, தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி மாதிரி  பணப்பெட்டியுடன் ஹெலிகாப்டரில் ஏறி தஜிகிஸ்தானுக்கோ, உஸ்பெகிஸ்தானுக்கோ பறந்துவிடவில்லை. வருவது வரட்டும் என்று காபூல் நகரிலேயே துணிச்சலுடன் இருந்தார், படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.

நஜிபுல்லாவுக்கு முஜாஹிதின்கள் அளித்த ‘தண்டனையை’ க் காட்டுமிராண்டித்தனம் என்று யாரும் கண்டிக்கவில்லை. காரணம், முஜாஹிதின்கள் அமெரிக்க ஆதரவாளர்கள். தலிபான்கள் இப்படிச் செய்திருந்தால் மட்டும்தான் அது காட்டுமிராண்டித்தனம். 

ஆப்கானிஸ்தானில் அதன்பிறகு பர்கானுதீன் ரபானி தலைமையில் முஜாஹிதின்களின் ஆட்சி நடக்க, ஒரு கட்டத்தில் அது அமெரிக்காவுக்குப் பிடிக்காமல்போக, தலிபான் என்ற அமைப்பை அமெரிக்கா கோடிகளைக் கொட்டி உருவாக்கியது.

பாகிஸ்தானில் உள்ள மதப் பள்ளிகளில் தலிபானை உருவாக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அள்ளிவிட்ட தொகை 450 கோடி டாலர்கள்.

தாலிப் என்றால் மதப் பள்ளி மாணவன். தலிபான் என்பது பன்மை.

1994ல் இதேபோலத்தான், இப்போது நடந்ததைப் போலத்தான், தலிபான்  படைகள் வெற்றிகரமாக காபூல் நகருக்குள் புகுந்தன. ரபானி ஆதரவாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று எஸ்கேப். 

அமெரிக்கா அதன் ஆய்வறையில் மெனக்கெட்டு உருவாக்கிய ஒரு  பிராங்கென்ஸ்டீன்தான் (Frankenstein) தலிபான்.

பிற்காலத்தில், 2001ல் அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தானில் இருந்த - தாங்கள் வளர்த்த கடாவான தலிபான் அரசையும்,  அங்கே தங்கியிருந்த பின்லேடனையும் ‘தண்டிக்க’ முடிவுசெய்தது அமெரிக்கா.

தலிபானை எதிர்த்துப் போர் செய்ய அப்போது வடக்குக் கூட்டணிப் படையினருக்கு அமெரிக்கா அள்ளி இறைத்த தொகை 70 மில்லியன் டாலர்கள். அதாவது தலிபானை வளர்க்க 450 கோடி டாலர். ஒழித்துக்கட்ட 70 மில்லியன் டாலர்கள்!

2001ல் ஒருநாள். இதேபோலத்தான் அமெரிக்காவும், அதன் ஆதரவுப் படைகளும் காபூல் நகரத்துக்குள் வெற்றிகரமாகக் கால் வைத்தன. தலிபானின் முல்லா முகமது ஓமரும், பின்லேடனும் டோராபோரா மலைகளை நோக்கி ஓடிப்போனார்கள்.

அதன் பிறகு 20 ஆண்டுகாலம் டிரில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவு செய்தும் தலிபானை ஒழிக்க முடியாமல் அமெரிக்கா ஓய்ந்து போய்விட, இப்போது 2021ல் காட்சிகள் மாறி மீண்டும் காபூல் நகருக்குள் தலிபான் படை வெற்றிகரமாக கால்வைத்து இருக்கிறது.

அமெரிக்கப் படைகளும், அதன் ஆதரவாளர்களும் இப்போது எஸ்கேப்.

ஆக, ஆப்கன் என்ற சினிமா படத்துக்கான திரைக்கதையை யாரோ மாற்றி  மாற்றித் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 

ஆப்கானிஸ்தானில் இதற்கு முன் தலிபான் ஆட்சி நடந்தபோது, ஆண்கள் கண்டிப்பாகத் தாடி வளர்க்க வேண்டும் என்பது போன்ற சட்டம் இருந்தது. தாடியை டிரிம் செய்தால் பதிலுக்குத் தலை கழுத்தில் இருந்து டிரிம்  செய்யப்படும் என்று சட்டத்திட்டம் இருந்தது.

ஆண்கள் அரைக்காற்சட்டை அணியத் தடை, கூலிங்கிளாஸ் அணியத் தடை, போட்டோ எடுக்கத் தடை, பட்டம் விடத் தடை என்று பல தடைகள் இருந்தன  (பெண்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். ரத்தக்கண்ணீர் வந்துவிடும்). 

அதே தலிபான்கள்தான் இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இந்த முறை பழைய மாதிரி கெடுபிடிகள் இருக்காது என்று தலிபான்கள் கூறுகின்றனர்.

2001ல் பாமியான் புத்தர் சிலையைத் தலிபான்கள் தகர்த்தபோது, உருவ வழிபாடு கூடாது என்ற மதக்கொள்கையின் அடிப்படையில் புத்தர் சிலையைத் தலிபான்கள் தகர்த்ததாக உலகம் சொன்னது.

ஆனால், உருவ வழிபாடு கூடாது என தலிபான்கள் நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த ஆண்டே முதல் வேலையாக புத்தர் சிலைத் தகர்ப்பை அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் தலிபான்கள் அப்படிச் செய்யவில்லை. 

பாமியான் புத்தர் சிலைத் தகர்ப்புக்கு தலிபான்கள் அப்போது சொன்ன காரணம் நெருடலானது. ‘உலகம் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. உலகத்தின் கவனத்தை ஈர்க்கவே புத்தர் சிலையைத் தகர்த்தோம்’ என்பதுதான் தலிபான்கள் சொன்ன காரணம்.

இந்த முறை, ஆப்கனில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், தலிபான்கள் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவருகிறார்கள்.

'வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் நிம்மதியாக வாழ முடியும்.  வெளிநாடுகளுடன் உறவை வளர்க்கவே விரும்புகிறோம். பெண்களுக்குப் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இருக்காது’ என்பதெல்லாம்  அந்த வாக்குறுதிகளில் சில.

உலகம் இதை நம்பித்தான் ஆக வேண்டும். ஆனானப்பட்ட அமெரிக்காவே  ஆப்கன் விவகாரத்தில் கையைக் கழுவிவிட்டு அப்ஸ்கான்ட் ஆகிவிட்ட  நிலையில், நமக்கும் வேறு என்னதான் வழி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com