
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் உள்ள பேஸ்புக் பயனாளர்களுக்கு புதிய வசதி அறிமுகப்படுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களின் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், அங்குள்ள பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்கும் வகையில் பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே கிளிக்கில் பயனாளர்களின் கணக்கை லாக் செய்யும் வகையில் பேஸ்புக் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கணக்கு லாக் செய்யப்பட்டால், பயனாளரின் நண்பர்களை தவிர வேறு யாரும் அவர்களின் புரோபைல் போட்டோவையோ டைம்லைனையோ பார்க்க முடியாதவாறு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கை தலைவர் நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தலிபான் குறித்து சிறுமி எழுதிய கடிதம்: ஏஞ்சலினா ஜோலி உருக்கம்
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஆப்கானிஸ்தானில் உள்ள பயனாளர்கள் தங்களின் கணக்குகளை எப்படி எல்லாம் பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்த வழிமுறைகளை பாப் அப் அலர்ட் மூலம் தெரியப்படுத்துகிறோம். நண்பர்களை தேடும் வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் அடையாளங்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக தலிபான்கள் விமரிசித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் தலிபான்களின் கணக்குகளை தீவிரமாக கண்காணித்துவருகிறது.
தலிபான்களை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.