மேடை நகைச்சுவையாளர் வெளியிட்ட விடியோ; சர்ச்சையாக்கிய பாஜக

வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டை சிறுமைப்படுத்தியதாக வீர் தாஸ் மீது தில்லி காவல்துறையினரிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா புகார் அளித்துள்ளார்.
பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ்
பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ்

பிரபல மேடை நகைச்சுவையாளரான வீர் தாஸ், 'ஐ கேம் ஃப்ரம் டூ இந்தியாஸ்' என்ற பெயரில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டை சிறுமைப்படுத்தியதாக வீர் தாஸ் மீது தில்லி காவல்துறையினரிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் விரிவான விளக்கம் அளித்துள்ள ஆதித்யா ஜா, "வேறு நாட்டில் நம் தேசத்தை யாரும் அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. வீர் தாஸை கைது செய்யும் வரை போராடுவேன். இந்தப் போராட்டத்தை தீர்க்கமான முடிவுக்கு கொண்டு செல்வேன். தேசத்தை யாரும் இழிவுபடுத்தக்கூடாது என்பதற்காக வீர் தாஸ் கைது செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

வாஷிங்டன் கென்னடி மையத்தில் நடைபெற்ற தனது நிகழ்ச்சியின் விடியோவை வீர் தாஸ் திங்கள்கிழமை பகிர்ந்துள்ளார். அந்த ஆறு நிமிட விடியோவில், இந்தியாவின் இரு வேறு முகங்கள் குறித்து விளக்கியுள்ள வீர் தாஸ், பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பற்றி விரிவாக பேசியுள்ளார்.

"நான் இருவேறு இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். உலகிலேயே 30 வயதுக்கு கீழான வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் 150 ஆண்டு கால பழமையான சிந்தனைகளை கொண்ட 75 வயது தலைவர்களின் பேச்சை கேட்கும் இந்தியா. 

பகல் நேரத்தில் போற்றுதலுக்குள்ளாகும் பெண்கள் இரவு நேரத்தில் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாவார்கள். இம்மாதிரியான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்" என வீர் தாஸ் தனது நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதை, ட்விட்டரில் பலரும் பகிர்ந்துவரும் அதே சமயத்தில், சிலர் கடுமையாக விமரிசித்திவருகிறார்கள்.

நாட்டை அவமதிக்கும் விதமாக செயல்படும் நோக்கம் தன்னிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ள வீர் தாஸ், "வெவ்வேறு விஷயங்களைச் செய்யும் இரண்டு தனித்தனி இந்தியாக்களின் இரட்டைத்தன்மை பற்றிய நையாண்டி விடியோ இது. எந்த தேசத்திலும் ஒளியும் இருளும், நன்மையும் தீமையும் உள்ளன. 

இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. நாங்கள் சிறந்தவர்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம் என நிகழ்ச்சியிலேயே பேசியுள்ளேன்.
நம்மை சிறந்ததாக்குவதில் கவனம் செலுத்துவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. நாம் அனைவரும் நேசிக்கும், நம்பும் மற்றும் பெருமிதம் கொள்ளும் ஒரு நாட்டை சிறப்பிக்கும் வகையில் தேசபக்தியுடன் அனைவரும் கைதட்டுவதுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. 

நம் நாட்டில் தலைப்புச் செய்திகளை விட, ஆழமான அழகு இருக்கிறது. அதுதான் விடியோவின் முக்கிய அம்சமும், கைதட்டலுக்குக் காரணமும் ஆகும். திருத்தப்பட்ட விடியோக்களால் தயவு செய்து ஏமாறாதீர்கள். மக்கள் நம்பிக்கையுடன் இந்தியாவை உற்சாகப்படுத்துகிறார்கள், வெறுப்புடன் அல்ல.

மக்கள் இந்தியாவுக்காக கைதட்டுவது மரியாதையோடுதான், அவமதிப்புடன் அல்ல. நான் என் நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன், அந்த பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறேன்" என்றார்.

வீர் தாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "இங்கு இரண்டு இந்தியா இருக்கிறது என்பதில் யாரும் சந்தேகப்பட முடியாது. ஆனால், ஒரு இந்தியர் அதை உலகுக்கு சொல்ல நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாகவும் பாசாங்குத்தனமாகவும் இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com