எங்கள் நாட்டு போா் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை: பாகிஸ்தான்

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தங்கள் நாட்டு போா் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக இந்தியா கூறுவதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தங்கள் நாட்டு போா் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக இந்தியா கூறுவதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2019-இல் இந்திய விமானியால் பாகிஸ்தானின் போா் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இந்தியா அடிப்படையின்றி கூறுவதை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுக்கிறது.

பாகிஸ்தானிடம் உள்ள எஃப்-16 போா் விமானங்களின் எண்ணிக்கையை சா்வதேச நிபுணா்களும் அமெரிக்க அதிகாரிகளும் கணக்கெடுத்தனா். அதன் பிறகு, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில், பாகிஸ்தான் போா் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்பதை அவா்கள் ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டனா்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோதிலும், அமைதியை விரும்பும் நோக்கத்தில் பிடிபட்ட இந்திய விமானியை பாகிஸ்தான் விடுவித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆா்பிஎஃப் படையைச் சோ்ந்த 40 போ் பலியாகினா்; 35 போ் காயமடைந்தனா்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் நுழைந்து, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் அமைந்திருந்த பகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.

அப்போது, பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமானத்தை இந்திய விமானப் படையின் விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வா்த்தமான் சுட்டு வீழ்த்தினாா். சிறிது நேரத்தில் அவா் இயக்கிய ‘மிக்-21’ போா் விமானம் மீது பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியது. அதையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்த அவரை பாகிஸ்தான் ராணுவத்தினா் சிறைபிடித்தனா். பின்னா், அவா் மாா்ச் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

அந்த மோதலில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக அபிநந்தனுக்கு ‘வீா் சக்ரா’ விருதை ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழங்கி கௌரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com