
தலிபான்கள் (கோப்புப் படம்)
ஆப்கானிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் உணவின்றி பசியால் வாடிவருகின்றனர். இந்நிலையில், மத்திய வங்கி இருப்பிலிருக்கும் பில்லியன் டாலர்கள் கணக்கிலான பணத்தை விடுவிக்குமாறு தலிபான்கள் தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான பில்லியன் டாலர்கள் கணக்கிலான பணம் வெளிநாடுகளில் சொத்தாகவும் அமெரிக்க மத்திய வங்கி மற்றும் ஐரோப்பாவின் மத்திய வங்கிகளில் பணமாகவும் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளிக்கும் அரசு கவிழ்க்கப்பட்டு தலிபான் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. இதையடுத்து, வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்ட பணம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நிதித்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பெண் கல்வி உள்பட மனித உரிமைகள் அனைத்தும் மதிக்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் அந்த நிதியை விடுவிக்க கோரி கோரிக்கை விடுத்தோம். ஆனால், சிறிய அளிவிலான பணம் மட்டுமே அளிக்கப்பட்டது.
அந்த பணம் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது. எங்களுடைய பணம் எங்களுக்கு வேண்டும். இந்த பணத்தை பயன்படுத்த தடை விதிப்பது நியாயமற்ற செயல். சர்வதேச விதிகளுக்கும் விழுமியங்களுக்கும் எதிரானது" என்றார்.
இதையும் படிக்க | உ.பி.யில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி
ஜெர்மனி உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள மத்திய வங்கியின் உயர் மட்ட அலுவலர் ஆப்கானிஸ்தானில் பொருளாதார சீர்குலைவை தவிர்க்க தங்களுக்கு சொந்தமான பணத்தை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.