விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளி.. அதன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும், அங்கிருந்த புறப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளியின் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம் தற்போது வெளிஉலகுக்குத் தெரிய வந்துள்ளது.
விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளி.. அதன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம்
விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளி.. அதன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம்


ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும், அங்கிருந்த புறப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளியின் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம் தற்போது வெளிஉலகுக்குத் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமெரிக்காவின் 20 ஆண்டு கால போர் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. அப்போது, காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் ஏற முடியாமல், இறக்கைகளில் அமர்ந்திருந்த மூன்று பேர் கீழே விழுந்து பலியானார்கள்.

ஆப்கனை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடா்ந்து, ஏராளமானோா் அந்நாட்டிலிருந்து வெளியேற முயன்றனா். அப்போது காபூல் விமான நிலையத்தில் திரண்டனா். அவா்களில் சிலா் அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் இறக்கைப் பகுதியிலும், டயா் பகுதியிலும் ஏறி அமா்ந்துகொண்டனா். விமானம் பறக்கத் தொடங்கியதும் அதிலிருந்து மூவா் தரையில் விழுந்து உயிரிழந்தனா். 
 

அந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்லிடப்பேசிகளில் விடியோ எடுத்திருந்தனர். அதில், ஒரு விமானம் மேலெழும்புகிறது. அதிலிருந்து சில புள்ளிகள் கீழே விழுகின்றன. அவ்வளவுதான். ஆனால், அந்த விடியோவின் பின்னாலிருக்கும் உண்மைச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானத்துக்குள் ஏற முடியாதவர்கள் அதன் சக்கரத்திலும், இறக்கைகளிலும் ஏறி அமர்ந்திருந்தனர். விமானம் புறப்பட்டதும் அதன் அதிர்வு மற்றும் வேகத்தால் அமர்ந்திருந்தவர்களுக்கு சில தேர்வுகள்தான் இருந்தன. ஒன்று கீழே விழுவது, சக்கரத்தில் சிக்கி மாண்டு போவது, காற்றில் அடித்துச் செல்லப்படுவது.

இதில் காட்சிப்படுத்தப்பட்டதுதான் அந்த மூன்று புள்ளிகள். ஆனால் உண்மையிலேயே அந்த சம்பவத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை என்னவென்று இதுவரை தெரியவரவில்லை.

தங்களது சி-17 விமானம் கத்தாரில் தரையிறங்கியபோது, அதன் சக்கரங்களின் மனித உடலின் மிச்சங்கள் ஒட்டியிருந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது. அதைவைத்து எத்தனைபேர் பலியானார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

அவா்களில் ஒருவா் ஆப்கன் தேசிய கால்பந்து ஜூனியா் அணியைச் சோ்ந்த ஜாகி அன்வாரி (19) என்று தெரிய வந்தது. அதில் மற்றொருவரின் அடையாளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  அவர்தான் ஃபிடா மொகம்மது. 24 வயதான பல் மருத்துவர். அவர் தனது வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்தவர் என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

கடந்த ஆண்டுதான் அவருக்கு திருமணமாகியுள்ளது. திருமணத்துக்காக வாங்கிய கடன் அவர்களது குடும்பத்தை அழுத்திக் கொண்டிருந்தது. அப்போதுதான், ஒரு பல் மருத்துவமனையை காபூலில் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தவருக்கு கனவு நிறைவேறியது.

ஆனால், கனவு கலைந்தது போல, தலிபான்கள் காபூலை கைப்பற்றினர். தனது எதிர்காலம் முழுவதும் கானல்நீரானதாக ஃபிடா உணர்ந்தார் என்கிறார் அவரது தந்தை பெயிண்டா.

அமெரிக்க விமானத்தின் சக்கரங்களைப் பற்றிக் கொண்டு தொங்கிய போது, தனது மகன் என்ன நினைத்திருப்பான் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உணர்ச்சிப் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அந்த முதியவர்.

தனது மகன் குற்றஉணர்ச்சியாலும் அச்ச உணர்வாலும் பீடிக்கப்பட்டிருந்தார். தனது குடும்பத்தின் கடனை செலுத்த வேண்டும் என்ற கடமை தனக்கிருப்பதாக உணர்ந்ததால்தான், இப்படிப்பட்ட ஒரு அபாயத்தை அவர் எதிர்கொண்டார்.

தனது கையால், முகத்தைத் தாங்கியபடி, தனது மகனின் கடைசி நிமிடங்கள் குறித்த யோசனையில் ஆழ்ந்த பெயின்டா, பிறகு சிந்தனை கலைந்து பேசத் தொடங்குகிறார். விமானத்தைப் பிடித்துக் கொண்டு தொடங்கும் போது, சக்கரம் சுழல ஆரம்பித்ததும், வேறு எந்த வழியுமே இல்லாமல் போய்த்தான் அவன் கீழே விழுந்திருப்பான். காற்றில் கரைந்திருப்பான்.

சம்பவம் குறித்துப் பேசிய அப்துல்லா வைஸ் கூறுகையில், நான் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தேன். பயங்கர சத்தம் கேட்டது. வெடிகுண்டுதான் என்று நினைத்து வெளியேறினேன். எல்லோரும் வீட்டின் மாடியை நோக்கி ஓடினார்கள். அங்கே வானத்திலிருந்து சில உடல்கள் விழுந்து கிடந்தன. ஒரேயிடத்தில் இரண்டு உடங்கள் விழுந்து கிடந்தன என்று ஓரிடத்தைக் காட்டுகிறார். அங்கே, நம் கண்களை உடனே மூடச் செய்யும் வகையில் ரத்தக் கறைகள் இப்போதும் காணப்படுகிறது. அவர்கள் கீழே விழும்போது, ஒருவருடைய கையை ஒருவர் பிடித்திருந்ததுதான் ஒரேயிடத்தில் விழக் காரணம் என்று நினைத்தார்.

அவர்களது உடல்கள் மற்றும் ஆடைகளை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த மசூதிக்கு விரைந்தார். 48 மணி நேரம் என்னால் சாப்பிடவோ உறங்கவோ முடியவில்லை. அதில் ஒருவருடைய ஆடையிலிருந்து அவரது தந்தையின் செல்லிடப்பேசி எண் கிடைத்தது. அதைவைத்து ஃபிடாவின் உடல் என்று கண்டறியப்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தது என்கிறார்.

இப்படி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், தலிபான் அரசை எதிர்கொள்ள பயந்து ஏராளமான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு ஓடி வந்த காட்சிகளையும் தங்கள் உயிரைக் கூட விட்டுவிடலாம், தங்களது பிள்ளைகள் தப்பித்தால் போதும் என்று சிறு பச்சிளம் குழந்தைகளை ஆப்கன் ராணுவத்திடம் ஒப்படைத்த தாய்மார்களின் கண்ணீரையும் ஊடகங்கள் வழியாகப் பார்த்தவர்கள், ஃபிடா போன்று எத்தனை பேரின் எதிர்காலக் கனவுகள் ஒரு சில நொடிகளில் தவிடு பொடியானதோ என்று எண்ணி வருந்தினர்.

சிறு புள்ளியாக விழுந்த ஃபிடாவைப் போல எந்தப் புள்ளியிலும் தென்படாமல் மறைந்த இளைஞர்களின் பின்னால் எத்தனை எத்தனை கண்ணீர் கதைகள் இருந்தனவோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com