நடராஜனுக்கு கரோனா பாதிப்பு: அடுத்தது என்ன?

ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்...
நடராஜனுக்கு கரோனா பாதிப்பு: அடுத்தது என்ன?

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஹைதராபாத் - தில்லி அணிகள் இன்று துபையில் மோதவுள்ளன. இந்நிலையில் பரிசோதனையில் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அனைவரும் இன்று காலை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் துபையில் நடைபெறவுள்ள ஹைதராபாத் - தில்லி ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார். 9-வது மற்றும் 10-வது நாளில் நடராஜனுக்கு கரோனா பரிசோதனை நடைபெறும். அதில் கரோனா இல்லை என உறுதியான பிறகு அவரால் அணியினருடன் இணைய முடியும், ஐபிஎல் ஆட்டங்களில் விளையாட முடியும். சமீபத்தில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் நடராஜன். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். நீண்ட காலமாக விளையாடாததால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரால் இடம்பெற முடியாமல் போனது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். 

ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விஜய் சங்கர், பெரியசாமி உள்பட பல வீரர்கள் செப்டம்பர் 1 அன்று தனி விமானத்தில் மும்பையிலிருந்து துபைக்கு வந்துள்ளார்கள். ஆனால் நடராஜன் மட்டும் செப்டம்பர் 9 அன்று பெங்களூரிலிருந்து பயணிகள் விமானத்தில் பயணித்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தார். அனைத்து வீரர்களும் ஆறு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பரிசோதனையில் கரோனா இல்லை என்று தெரிந்த பிறகே பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த முதல் வாரம் இரு நாள்களுக்கு ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 2-வது வாரத்திலிருந்து ஒவ்வொரு ஐந்து நாளுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்பட்டது. 

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜன், அறிகுறிகள் எதுவுமின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com