வீணாகும் உழைப்பு: கே.எல். ராகுல் - மயங்க் அகர்வால் கூட்டணியை வெறுப்பேற்றும் பஞ்சாப் அணி

இருவரும் நான்கு முறை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.
வீணாகும் உழைப்பு: கே.எல். ராகுல் - மயங்க் அகர்வால் கூட்டணியை வெறுப்பேற்றும் பஞ்சாப் அணி

சமீபகாலமாக ஐபிஎல் போட்டியின் மிகச்சிறந்த கூட்டணி என கே.எல். ராகுல் - மயங்க் அகர்வாலைக் கூறலாம்.

கடந்த இரு போட்டிகளில் மட்டும் இருவரும் நான்கு முறை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள். (183, 122, 120, 115 ரன்கள்) எந்த அணியும் இப்படியொரு தொடக்கக் கூட்டணிக்குக் கனவு மட்டுமே காண முடியும்.

ஆனால் இவர்களை வெறுப்பேற்றும் விதமாக எப்போதெல்லாம் ராகுலும் மயங்க் அகர்வாலும் 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைக்கிறார்களோ அப்போதெல்லாம் சொல்லி வைத்தாற்போல இதர பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிடுகிறார்கள். இதனால் 100 ரன்களுக்குக் கூட்டணி அமைத்த நான்கு முறையும் பஞ்சாப் அணி தோல்வியடைந்துள்ளது! நேற்றைய ஆட்டத்திலும் அதுதானே நடந்தது?

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார் கார்த்திக் தியாகி. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. இளம் வீரர் ஜெயிஸ்வால் 49 ரன்களும் லோம்ரோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் எவின் லூயிஸ் 36 ரன்களும் எடுத்தார்கள். அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது. ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்தார்கள்.

ராகுல் - மயங்க் கூட்டணி தனியாக இல்லை என்பது மட்டும் ஓர் ஆறுதலான விஷயம். இதேபோல இன்னொரு ஜோடியும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.

ஆர்சிபி அணியில் கெய்லும் கோலியும் நான்கு முறை 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்துள்ளார்கள். ஆனால் அந்த நான்கு முறையும் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. 

டி20 கிரிக்கெட்டிலேயே வேறு எந்த ஜோடியும் நான்கு முறை 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்தும் தோல்வியைச் சந்தித்ததில்லை. 

ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டும்போது தொடக்கக் கூட்டணி அதிகமாக ரன்கள் எடுத்தும் தோல்வி கிடைத்ததில் ராகுல் - மயங்க் அகர்வால் கூட்டணிக்கு 2-ம் இடம். இதற்கு முன்பு 2014-ல் கெளதம் கம்பீரும் உத்தப்பாவும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக இலக்கை விரட்டும்போது 121 ரன்கள் எடுத்தும் தோல்வியே கிடைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் ராகுல் - மயங்க் கூட்டணி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com