என்னது பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு இவ்வளவு உயர்ந்திருச்சா?

கடந்த ஓராண்டு காலத்தில், உலகின் 25 பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு 23 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவால் பல்வேறு தரப்பினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பெரும் பாதிப்படைந்தனர். இருப்பினும், பணக்காரர்கள் மீது இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

பெருமளவிலான பணப்புழக்கம், உயரும் பங்குச் சந்தைகள், அவர்களுக்கு ஏதுவான வரிக் கொள்கை ஆகியவை பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர பெருமளவில் உதவியுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில், 25 பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பிருந்த சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இது 22 சதவிகிதம் அதிகமாகும்.

சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் இன்க் நிறுவனத்தில் கிட்டத்தட்ட பாதியை வைத்திருக்கும் வால்டன்ஸ் ஆஃப் ஆர்கன்சாஸ், நான்காவது ஆண்டாக 238.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. பிப்ரவரி மாதம் முதல் இக்குடும்பம் $ 6 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் அவர்களின் சொத்து மதிப்பு $ 23 பில்லியன் அதிகரித்துள்ளது.

பிரான்சின் டாஸால்ட்ஸ், மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் விமான நிறுவனம், நியூயார்க்கைச் சேர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பாளர் எஸ்டீ லாடர் ஆகியோர் பணக்காரர்களின் பட்டியலில் புதியதாக இடம்பெற்றுள்ளனர். 

தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரான லீஸின் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்தாண்டு, சாம்சங் நிறுவனத்தின் தலைவராக இருந்த லீ குன்-ஹீ இறந்ததைத் தொடர்ந்து, 11 பில்லியன் டாலர்கள் பரம்பரை வரியை லீஸின் குடும்பம் செலுத்தியது. இதையடுத்து, அவர்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டது.

தரவரிசையில் ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரது சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, அவர்களின் லாபம் பெருமளவில் உயர்ந்தது. ஹெர்ம்ஸின் குடும்ப சொத்து 75% அதிகரித்து 111.6 பில்லியன் டாலராக அதிகரித்தது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. பணக்காரர்கள், ஏழைகள் ஆகியோருக்கிடையேயான இடைவெளி வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. பணக்கார குடும்பங்களின் சொத்து அதிகரித்திருப்பது இதை வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் பணக்காரர்களிடம் அதிக வரிக் கோரும் திருத்தங்களை மேற்கொள்ள பைடனும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களும் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com