வென்டிலேட்டரில் சல்மான் ருஷ்டி; கண்பார்வை பறிபோகும் அபாயம்

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சல்மான் ருஷ்டி
சல்மான் ருஷ்டி
Published on
Updated on
1 min read


புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சல்மான் ருஷ்டியின் உடல்நிலை குறித்து, அவரது உதவியாளர் ஆன்ட்ரூ வைய்லே கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை, சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அவரை கத்தியால் குத்தியதில் அவரது கல்லீரல் சேதமடைந்துள்ளது. கை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவருக்கு கண்பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் மா்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டாா். இந்தத் தாக்குதலில் ருஷ்டி கழுத்தில் காயமடைந்தாா். அவருக்கு உடனடியாக மேடையிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் அவா் ஹெலிகாப்டா் மூலம் உள்ளூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். 

மேடையில் ருஷ்டியின் அருகே இருந்த நபரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தாா். தாக்குதல் நடத்திய நபரை பாா்வையாளா்கள் மடக்கிப் பிடித்தனா்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ருஷ்டியை அந்த நபர் பத்து முதல் 15 முறை கத்தியால் குத்தியதாகவும், அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்ததாகவும் கூறுகிறார்கள்.

அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர் மார்ட்டின் ஹாஸ்கெல், அவரது காயங்கள் மோசமானவைதான் ஆனால் குணப்படுத்தக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சடானிக் வோ்ஸஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் விலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா்.

சா்வதேச அரசியல் நிலவரங்கள் மாறிய நிலையில், ஃபத்வா ஆணை செயல்படுத்தப்படாது என்ற ஈரான் தெரிவித்தாலும் சல்மான் ருஷ்டிக்கு எதிரான உணா்வு தொடா்ந்து நீடித்துவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com