
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழர் ஒருவர் ஏலத்தில் 3 மாம்பழங்களை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட தேவைகளுக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனா்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையும் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கணேசபுரம் என்கிற பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக உற்சவ பூஜைகள் நேற்று நடைபெற்றது. அப்போது, விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் மாலைகள் ஏலத்தில் விடப்பட்டன.
மூல தெய்வத்திற்குப் படைக்கப்படும் கனிகளை ஏலத்தில் வாங்கும் வழக்கம் அப்பகுதியில் இருப்பதால், மாம்பழத்தை வாங்க திருவிழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டு தமிழர்கள் உள்பட பலரும் ஆர்வம் காட்டினர்.
ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு 3 மாம்பழங்களையும் மாலைகளையும் ஏலத்தில் வாங்கியுள்ளார்.
மேலும், அதில் ஒரு மாம்பழத்தை பக்தர்களுக்கு பகிர்ந்து கொடுத்ததுடன் மற்ற 2 மாம்பழங்களை குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டதாக ஏலம் எடுத்தவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.